- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
இந்து தமிழ் திசை வாசகர்களுக்கு ஜெயம் சரவணன் ஜோதிடரின் அன்பான வணக்கங்கள்.

குருபகவான் முழுமையான சுபக் கிரகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். குருபகவானின் உதவியில்லாமல் எந்த சுப காரியங்களும் நடத்த முடியாது. நடக்கவும் சாத்தியமில்லை. திருமணம், புத்திரபாக்கியம், சொந்த வீடு, சிறந்த வேலைவாய்ப்பு, வழக்குகளில் சாதகமான நிலை, நோயிலிருந்து மீண்டு வருதல், எதிரிகளையும் நண்பர்களாக மாற்றுதல், உயிராபத்து தரும் கண்டங்களில் இருந்து காப்பாற்றுதல், இழந்துவிட்ட பொருளாதாரம் மட்டுமில்லாமல், மரியாதை, கௌரவம் போன்றவற்றை மீட்டுத் தருவதும் குரு பகவான் தான்! வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்தல், இப்படி பலவிதமான விஷயங்களையும், காரியங்களையும் நடத்தித் தருபவர் தான் குரு பகவான்.
குரு பகவான் அமர்ந்திருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே சிறப்பு என்பது ஜோதிடத்தின் அடிப்படை விதி. எல்லா கிரகங்களுக்கும் 7-ம் இடம் பார்வை என்பது பொதுவானது. அதேபோல குரு பகவானுக்கும் ஏழாமிடப் பார்வை உள்ளது. ஏழாம் இடத்தை மட்டுமல்லாமல் சிறப்புப் பார்வையாக ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் குருபகவானுக்கு உண்டு. இதில் ஐந்தாம் பார்வை க்கு 95 சதவீத பலனும் ஏழாம் பார்வைக்கு 97% பலனும் ஒன்பதாம் பார்வைக்கு 100 சதவீத பலன்களையும் குருபகவான் தந்தருள்வார்.
தற்போது தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான் வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 15ம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 20ம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார்.
மகர ராசிக்கு வரும் குரு பகவானால் என்ன விதமான பலன்கள் நடக்கும்? எந்த ராசிக்கு நன்மைகளையும்? எந்த ராசிக்கு சிரமங்களையும் தர இருக்கிறார்? என்பதைப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக பொதுவான சில தகவல்களைச் சொல்லுகிறேன்.
மகர ராசிக்கு வரும் குருபகவான் அந்த ராசியில் நீசம் எனும் அந்தஸ்தை அடைகிறார். நீசம் என்றால் தன் பலத்தை முழுமையாக இழப்பது என்று பொருள். ஆனால் ஆச்சரியமாகவும், வியக்கத் தக்க வகையிலும் குரு பகவான் நீசம் நீங்கி "நீசபங்க ராஜயோகத்தை" தர இருக்கிறார். இது முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய அதிசயம்!

எப்படி நீச்ச பங்கம் அடைகிறார்?
மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பலத்தோடு அமர்ந்திருக்கிறார். அந்த மகர ராசிக்குள் வரும் குரு பகவான், ஆட்சி பெற்ற சனியோடு இணைவதால் தன்னுடைய நீசம் நீங்கி, நீசபங்கம் அடைந்து ராஜ யோகத்தைத் தருவார். இந்த மாதிரியான நிகழ்வு 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். அதனால்தான் இதை ஒரு அதிசயமான, அபூர்வமான குருப் பெயர்ச்சி என்கிறது ஜோதிட சாஸ்திரம்!
அற்புதமான குருப் பெயர்ச்சி இது. இப்படி "நீச பங்கம்" அடைந்து பலன்களை வழங்க இருக்கும் குருபகவான்.., தான் வழக்கமாகத் தரும் பலனை விட பத்து மடங்கு அதிக பலன்களைத் தருவார். இதனால்தான் இந்த குருபெயர்ச்சி சிறப்பு வாய்ந்தது. மகத்துவம் வாய்ந்தது. முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த குருப் பெயர்ச்சியால் குருவின் பார்வையைப் பெற்று சிறப்பு பலன்களை பெறப்போகும் ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி இந்த மூன்று ராசிக்காரர்களும் குரு பகவானின் 5, 7 மற்றும் 9ஆம் பார்வையை முழுமையாகப் பெறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் குரு பகவான் ஒரு ராசிக்கு இரண்டாமிடத்திற்கும், பதினோராம் இடத்திற்கும் நற்பலன்களைத் தருவார். அதன்படி தனுசு ராசிக்கு இரண்டாமிடத்தில் குரு வருவதாலும், மீன ராசிக்கு 11-ம் இடத்திற்கு குரு பகவான் வருவதாலும் இந்த இரண்டு ராசிக்காரர்களும் சிறப்பு அந்தஸ்து கிடைக்கப் பெற்று சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். ஆக, ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் முதலான ராசிக்காரர்கள், குருப்பெயர்ச்சியால் எண்ணற்ற பலன்களை, பன்மடங்குப் பலன்களைப் பெற இருக்கிறார்கள்.
இந்த ஐந்து ராசிகளைத் தவிர மற்ற ஏழு ராசிகளுக்கும் குரு பார்வை ஓரளவுக்கு நன்மைகளையும் ஒரு சில எச்சரிக்கை உணர்வுகளையும் தரும்.

ஒரு சில நன்மைகளையும், சிறிய அளவிலான பாதிப்புகளையும் பெறக்கூடிய ராசிகள் எவை? மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம்,கும்பம் இந்த ஏழு ராசிக்காரர்களும் சற்று கவனமுடனும், நிதானத்தோடும் செயல்பட வேண்டும். ஒரு சில பரிகாரங்களைச் செய்து குருபகவானின் முழுமையான அருளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது பற்றிய விவரங்களை உங்களுடைய ஒவ்வொரு ராசிக்கும் தரப்போகும் பலன்கள் பகுதியில் விரிவாகவே சொல்லுகிறேன்.
பொதுவாக குருபகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு முழுவதும் இருந்து பலன் தருவதாகவே அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் குருபகவான் ஒரு ஆண்டு முழுவதும் ஒரு ராசியில் இருந்தாலும் அவருக்கு ஒரு சில மாற்றங்கள் நடக்கும். அதாவது சூரியனை விட்டு விலகி இருக்கும் பொழுது வக்ர கதியிலும், சூரியனோடு நெருங்கும் பொழுது அஸ்தமனம் என்னும் நிலையையும், சூரியனிடமிருந்து குறுகிய தூரத்தில் இருக்கும் பொழுது சீக்கிர கதி எனினும் அதிசார நிலையையும் அடைகிறார். இந்த மூன்று நிலைகளிலும் ஏறக்குறைய ஐந்தரை மாதங்கள் தன் இயல்பான நிலையிலிருந்து மாறி விடுவார். மீதமிருக்கும் ஆறரை மாதங்கள் மட்டுமே தன்னுடைய இயல்பான குணத்தோடு பலன்களைத் தருவார். ஆக, அவர் தருகின்ற பலன்களிலும் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

எனவே, சிரமமான சூழ்நிலைகள் ஏற்படும் என்று சொன்னதும் சற்றே கலக்கமடைந்த நீங்கள், இந்த ஐந்தரை மாதங்கள், ஏறக்குறைய ஒரு ஆண்டில் பாதிக்குப் பாதி, உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதை மறந்துவிடவேண்டாம். நற்பலன்கள் நடக்கக்கூடிய ராசிக்காரர்களும் முழுமையாக நற்பலன்கள் வந்து கிடைத்துவிடும் என்று அதீத நம்பிக்கையையும் ‘அதான் குருப்பெயர்ச்சி சூப்பரா இருக்குதே...’ என்று அசிரத்தையாகவும் இருக்கவேண்டாம். இவை அனைத்துமே இறைவனின் திருவுளப்படி, ஆணைப்படி நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் சுப பலனும் அல்லது அசுப பலனும் நடந்தால் அவன் தன் சுய தன்மையை இழந்து விடுவான். எனவேதான் நன்மைகளையும் தீமைகளையும் மாற்றி மாற்றித் தந்து, மனிதனை மனிதனாகவே வைத்திருக்கவே கடவுளின் படைப்பில் இப்படியான நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
இந்த குருப்பெயர்ச்சி நமது இந்திய திருநாட்டிற்கு நிச்சயமாக நல்ல பலன்களைத் தரும் என்பதை முழுமையாக, உறுதியாக நம்பலாம். தமிழகத்திற்கும் மிகச் சிறந்த பலன்கள் நடக்கும் என்பது உறுதி! முக்கியமான பிரச்சினையாக இருக்கக் கூடிய நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும். தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும். வேலை வாய்ப்புகள் பெருகும். மழை சிறப்பாகவே இருக்கும். விவசாயம் செழிக்கும். விவசாயிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை, பங்கு வர்த்தகத் துறை முதலானவை சீரான வளர்ச்சியை அடையும்.

மிக மிக முக்கியமாக தங்கம் விலை வெகுவாகச் சரியும். தங்கம் விலை குறையும் பொழுது ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் மிக பிரம்மாண்ட வளர்ச்சியை அடையும். கட்டுமானத்துறை படிப்படியாக மீண்டும் பழைய உச்சநிலையைத் தொடும்.
தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். சிறு தொழில் செய்பவர்கள் முதல், பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் இதுவரை இருந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவார்கள். லாபம் அதிகமாக கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூட தொழில் செய்யும் முனைப்பு காட்டுவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு. அது தொடர்பான முயற்சிகளில் இப்போது ஈடுபடுவார்கள்.

சுப விசேஷங்கள் அதிகமாகவே நடந்தேறும். திருமணம், புத்திர பாக்கியம், குழந்தை பிறப்பு, இரட்டை குழந்தைகள் பிறப்பது போன்றவை இருக்கும். கால்நடைகள் சிறப்பாக பராமரிக்கப்படும். மழைப்பொழிவு சிறப்பாக இருப்பதால் விவசாயம் சிறப்பான வளர்ச்சியை செழிப்பாகவே எட்டும். இப்படி பலவிதமான தொழில்களும் நல்ல வளர்ச்சியைப் பெறுவதாக இருந்தாலும் ஒருசில பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியது வரும்.
போலி நிறுவனங்கள் அதிகரிக்கும். பணம் இரட்டிப்பு தருவதாக கூறுகின்ற நிறுவனங்கள் அதிகரிக்கும். ஆசை வார்த்தைகளைத் தூண்டி நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை நாம் இழக்கும்படி செய்யும் சூழல் உருவாகும். இப்படியான ஏமாற்றுவோர் அதிகமாவார்கள். கவனமாக இருக்கவேண்டும்.
முக்கியமாக, 12 வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும். சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால், இரவு நேர பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பங்காளிச் சண்டை அதிகரிக்கும். அதாவது சகோதர ஒற்றுமை குறையும். பாகப்பிரிவினை பிரச்சினைகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
பொதுவாக நற்பலன்கள் அதிகமாக இருப்பதாலும், ஒருசில கெடுபலன்கள் இருப்பதாலும்.., இந்த குருப்பெயர்ச்சியை வழிபாடுகளிலும் நற்செயல்களிலும் நாம் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும். நற்பலன்களை அதிகரிக்கவும், கெடு பலன்களை குறைத்துக் கொள்ளவும், காஞ்சிபுரத்தில் அமைந்திருக்கும் ஏகாம்பரநாதரை வழிபாடு செய்வது நல்ல பலன்களை அதிகரித்துத் தரும்.
அதுமட்டுமல்லாமல் மரங்களை நடுவதும் வளர்ப்பதும் மிகுந்த பயனைத் தரும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். கைம்பெண்கள் திருமணத்திற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். இதனால் கோடி நன்மைகள் நம்மை வந்து சேரும். எம்பெருமான் முருகன் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும். குருவருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.








