அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று (அக்.27) தொடங்குவதாக இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 - 21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்துகிறது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு அக்.27-ம் தேதி (இன்று) முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.