பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவு 16-ம் தேதி (நாளை) வெளியிடப்பட உள்ளது. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அவசர சட்டம் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு மாதம் ஆகியும், பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
சமூக நீதிக்கு எதிரான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல்அளிக்கும் விஷயத்தில் ஆளுநர்தொடக்கம் முதலே எதிர்மறையாகத்தான் செயல்பட்டு வருகிறார். 7.5 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், நடப்பு ஆண்டில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த ஓரிரு நாட்களுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதற்குள் ஆளுநர் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், நடப்பு ஆண்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாது. அடுத்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமானால் அது சமூகநீதிக்கும், ஏழை மாணவர்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமைந்துவிடும். எனவே, எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுநருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகுதான் மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.