தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யும். நீலகிரி, தேனி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோத்தகிரியில் 12, கிண்ணக்கொரை, கெட்டியில் தலா 10, சாம்ராஜ் எஸ்டேட் பகுதியில் 9 செ.மீ. மழை பதிவானது.
திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








