அதே போல அசுரக் குணங்கள் தேய்ந்து விலகிய நாள், அறியாமை என்ற இருள் அகன்ற நாள், புனிதநாள், அறிவொளி பரந்த நாள், அகந்தை ஒழிந்த நாள், அருளும், கருணையும் மறுமலர்ச்சி பெற்ற நாள், அமைதி பிறந்த நாள், தீயனவெல்லாம் தொலைந்த பெருநாள் என்றெல்லாம் சிறப்புப் பெறுகிறது தீபாவளி திருநாள்.
தீபாவளி அன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. தொடர்ந்து நெருங்கிய உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வதுடன், இனிப்புப் பலகாரங்கள் வழங்கி விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வதும் ஒரு பாரம்பரிய வழக்கமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலும் பட்டாசு வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்கிறார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகை வெவ்வேறு விதமாகவே கொண்டாடப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில பாரம்பரிய பண்பாட்டு மரபுகளுக்கு ஏற்ற வகையில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோலவே, இலங்கையிலும் அந்தந்தப் பிரதேச பண்பாடு, கலாசாரத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்படி கொண்டாடினாலும் பொதுவாக உறவுகளை நேசித்து அன்பை பெருக்குவதே தீபாவளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும்.








