அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.1,250-ம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

பிஎச்.டி. படிப்பில் சேர்ந்தால் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி 2020-21 -ம் கல்வியாண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு வரும், 27 -ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வு 2 தாள்களைக் கொண்டது. மொத்தம் 100 மதிப்பெண்கள். காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் முதல் தாள் தேர்வில் மாணவர்களின் சிந்தனை பரிசோதிக்கப்படும். இடைவேளைக்கு பின்னர் 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை 2-ம் தாள் தேர்வு நடைபெறும். அப்போது, மாணவர்களின் அறிவைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். மாணவ, மாணவிகள் அனைவரும் ஓஎம்ஆர் தாளில் கருப்பு நிறப் பேனா கொண்டு விடையளிக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 32 மதிப்பெண்களும், மற்ற பிரிவினர் 40 மதிப்பெண்களும் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும்.









