
சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் தமிழகம் முழுவதும்
அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக இன்று
முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் செயல்படும் என்று அரசு
அறிவித்துள்ளது. கல்லூரிகளுக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும்
‘ரூட் தல’ மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் மற்றும்
பயணிகளுக்கு இடையூறாக ஆட்டம் பாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
கடந்தாண்டு
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தல’
பிரச்னையில் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாநகர பேருந்தை
வழிமறித்து பட்டாக்கத்தியால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர்.
இதனால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் உள்ள துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் போலீசார் அனைத்து மாநகர பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், அனைத்து கல்லூரிகள் முன்பும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி இறுதி ஆண்டு மாணவர்கள் இன்று ‘ரூட் தல’ பிரச்னையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு, கைது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








