
பல்லடம்: பல்லடம் அருகே அரசு பள்ளியில், பின்லாந்து நாட்டின் தொழில்நுட்பத்தை கொண்டு, மெய்நிகர் வகுப்பறை அமைக்கப்பட உள்ளது.பல்லடம் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரி அரசு நடுநிலை பள்ளியில், 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில், சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற இப்பள்ளியில், பின்வந்த நாட்டின் தொழில் நுட்பத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தலைமை ஆசிரியர் கற்பகம் கூறியதாவது:பி.டி.ஏ., ஒருங்கிணைப்புடன் பள்ளியில், 'ஸ்மார்ட்' டிவி., வகுப்பறை, கணினி ஆய்வகம் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டை காட்டிலும் மாணவர்களின் சேர்க்கை இதனால் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பள்ளியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டு மெய்நிகர் வகுப்பறை அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம். விண்வெளி, வனம், மழை பெய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மாணவர்கள் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். பின்லாந்து நாட்டில் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம், செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.








