
தென்கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது கன்னியாகுமரிக்கு கிழக்கே 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென் கிழேக்கே 975 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக மாறி குமரி கடல் பகுதியில் நிலைக்கொள்ளும் என்றும் கூறியுள்ளது. இதனால், இன்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், டிசம்பர் 2-ஆம் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் டிசம்பர் 3-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தகவல் தெரியாமல் ஏற்கெனவே அரபிக்கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு உறவினர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தாழ்வு மண்டலத்தின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு, மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனளிப்பதாகத் தகவல்.. முழுவிவரம்..
கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.








