கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மாற்றுப் பணிகளைத் தேடி சொல்லொனாத் துயரம் அனுபவித்து வரும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், நேற்று (வியாழன்) சட்டசபையில் முதல்வர் 9, 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு தேர்வு இல்லை எனவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ளதனை அடுத்து, இன்று (வெள்ளி) முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பல பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது வரையிலும் மிகக் குறைவான ஊதியத்தில் பணியாற்றி வந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் தற்போது அதனையும் இழந்து கேட்பாரின்றித் தவிக்கின்றனர்.
இது குறித்து பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயக்கண்ணன், தமிழக அரசின் ஆல் பாஸ் அறிவிப்பினை வரவேற்கும் அதே நேரத்தில், நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இது நாள் வரையிலான காலத்தினைக் கணக்கிட்டு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.









