வாசுதேவநல்லுார் தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 2331 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2019 அக்.,4ல் அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பித்தேன்.
அரசுத் தரப்பில் நியமன நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை. அரசுக் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரிவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி அவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க அரசுத் தரப்பில் மறைமுக முயற்சி நடக்கிறது. பல்கலை மானியக்குழு விதிகள்படி உதவி பேராசிரியர்களை டி.ஆர்.பி.,மூலமே நியமிக்க வேண்டும்.
அந்த இடத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பின்பக்கவாசல் வழியாக நியமித்தால், ஏற்கனவே வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்.பொது வேலைவாய்ப்பில் வெளிப்படைத் தன்மை தேவை. கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும்.
2019ல் டி.ஆர்.பி.,வெளியிட்ட அறிவிப்பின்படி தேர்வு நடைமுறைகளை பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாண்டியம்மாள் குறிப்பிட்டார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு: உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், டி.ஆர்.பி.,தலைவர் மனுவை விரைவில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.