மாநில நல்லாசிரியர் விருதும் எதிர்பார்ப்பும் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாநில நல்லாசிரியர் விருதும் எதிர்பார்ப்பும் :

images%20(65)
 

அண்மையில் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர்களுக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது அறிவித்துள்ளது. இதில் தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலா 171 பேருக்கும் ஏனையோருக்கு மீதமுள்ள விருதுகள் என முறையே அறிவிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது. ஆசிரியர் நாளான செப்டம்பர் 5, 2022 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ள விருதாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுவரை அளிக்கப்பட்டு வந்த நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நடைமுறையில் சிறந்த முறையில் செயல்படும் அனைத்துத் தரப்பினரும் வயதினரும் விண்ணப்பிக்க ஏதுவாக ஐந்து ஆண்டுகள் பணியனுபவம் என்று புதிய வரையறை செய்து கடந்த காலங்களில் அறிவித்துள்ளவாறு அறிவிக்கை வெளியிட்டது சிறப்பு வாய்ந்தது. மேலும், காலத்திற்கேற்ப தம்மைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்டு நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைச் செவ்வனே மேற்கொண்டு வரும் புதிய இளம் தலைமுறையினர் அங்கீகரிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்பது இந்தமுறை தான் சாத்தியமாகி இருக்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உடலாலும் மனத்தாலும் சொந்த பணத்தாலும் அனைத்தையும் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் அர்ப்பணித்து உழைக்கும் நல்லோர் அனைவரும் நல்லாசிரியர்களாகப் பெருமைப்படுத்தும் நட்டு உள்ளனர். இதுவொரு நீண்ட கால கனவாகும். அதுபோல், இளையோரின் உரிய உகந்த உன்னத உழைப்பை தக்க வகையில் அரசு அங்கீகரிப்பது இன்றியமையாத ஒன்று என்பது கல்வியாளர்களின் தொன்றுதொட்ட கோரிக்கையாகும். அது இப்போது தான் நிறைவேறியுள்ளது.

இன்றைய தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் அவற்றைச் சார்ந்த கற்பித்தல் அணுகுமுறைகள் அனைத்திலும் இளைய ஆசிரியர் சமுதாயத்தினரின் பங்களிப்புகள் அளப்பரியவை. பல்வேறு புதிய தகவல் தொழில்நுட்ப அறிவையும் திறனையும் ஒருங்கே அமையப்பெற்று அவற்றை உரிய வகையில் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்து பேரிடர் காலத்தில் பேருதவிகள் புரிந்த ஆசிரியர் பெருமக்கள் பலருக்கும் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பதில் கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இதற்காக தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வி அலுவலர்கள் ஆகியோரை மனமார பாராட்டியே ஆகவேண்டும்.

கடந்த காலங்களில் பணி ஓய்வு பெற இருக்கும் அல்லது பெற்று நீட்டிப்பு பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகையாக இவ்விருது பெரும்பாலும் இருந்து வந்துள்ளது. தவிர, ஆளுங்கட்சி பரிந்துரைகள் மற்றும் அரசியல் செல்வாக்குகள் நல்லாசிரியர் விருதில் கோலோச்சிய வரலாறுகள் கசப்பானவையாக இருந்துள்ளன. ஆனால், தற்போதைய விருதாளர்கள் தேர்வில் பெரும்பாலும் தகுதியானவர்களுக்கே விருதுகள் போய்ச் சேர இருப்பது வரவேற்கத்தக்கது.

விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் நபர்கள் அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சி தொடர்புடையோராகவும் வணிகரீதியாக தனிப்படிப்பு சொல்லிக் கொடுப்பவராகவும் கட்டாயம் இருக்கக் கூடாது எனவும் எவ்வித குற்றச்சாட்டிற்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும் பொதுச் சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரித்தல், மிகவும் பின்தங்கிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபடுவோராகவும் விருதாளர்கள் இருப்பது அவசியம் என்று வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், இசை, ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆகியோர் விருதிற்கான தகுதிவாய்ந்த நபர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஏனெனில், ஆசிரிய சமூகத்தில் இவர்கள் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்படும் நபர்களுள் குரலற்றவர்களாகவே பல்லாண்டுகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு நல்வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசின் முயற்சிக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இவ்விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் அலுவலகங்களில் நிர்வாகப் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதை எளிதில் எடுத்துக் கொள்வதற்கில்லை. ஏனெனில், அலுவலக நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவோர் யாரும் வேண்டி விரும்பி வந்தவர்கள் அல்லர். உயர் அலுவலர்களால் நிர்வாகப் பணி மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் ஆவர். மாணவர்களின் ஒப்பற்ற சொத்தாக விளங்கும் ஆசிரியப் பெருமக்களை கல்வி சார்ந்த நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவது என்பது சரியான நடைமுறை கிடையாது. அஃது ஏற்கத்தக்கது அல்ல.

தற்போது வரை கல்வி சார்ந்த பல்வேறு நிர்வாகப் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் அனுபவமும் ஆற்றலும் நிறைந்த இளம் ஆசிரியர்கள் பலர் கோவிட் 19 நோய்ப் பெருந்தொற்று ஊரடங்கு காலம் கடந்தும் கூட வீட்டிலிருந்து வேலைசெய்தல் (Work From Home) அடிப்படையில் நேரடியாக பணிசெய்து வருவது வருந்தத்தக்கது. இணைய வழிப் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு, காணொலித் தயாரிப்பு மற்றும் தொகுப்பு, கல்வி மேலாண்மைத் தகவல் மையப் பணிகள், புதிய கல்விச் செயலிகள் உருவாக்கம் மற்றும் நிர்வகித்தல் பணி, பயிற்சி பட்டறைகள் நடத்துதல் மற்றும் வழங்குதல், கையேடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவதில் உதவிபுரிதல் முதலானவற்றிற்காக பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிலையிலிருந்து தகவல் தொழில்நுட்ப நிர்வாகப் பணியாளர்களாக இவர்களை மாற்றம் பெறச் செய்ததற்கு யார் பொறுப்பு? இந்த அவலநிலை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பலபேரின் நிலை புலிவாலைப் பிடித்த கதையாக இருக்கிறது. இவர்கள் மீளவும் பள்ளி சென்று தம் தொழில்நுட்பம் சார்ந்த உத்தியுடன் கற்பித்தலில் ஈடுபடும் நாள் எந்நாளோ? யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்கும் தரமான தகவல் தொழில்நுட்பக் கல்வி மற்றும் நிர்வாக மேலாண்மை சார்ந்த புத்தம் புது நடைமுறைகளில் வெளியில் தெரியாமல் மறைந்திருந்து முதுகெலும்பாக விளங்கும் இளைய தலைமுறையினரை நல்லாசிரியர் விருதில் புறக்கணிப்பதும் புறந்தள்ளுவதும் சரியல்ல. இத்தகையோரையும் கவனத்தில் கொண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நடைமுறையில் உரிய உகந்த திருத்தம் மேற்கொள்வதும் இன்றியமையாதது. இவர்களுள் தலைசிறந்தவர்களுக்கு மொத்த விருதாளர்களில் 5% ஒதுக்கீடு செய்து விருது வழங்கும் முடிவை அரசு நடப்பாண்டு முதற்கொண்டு செயல்படுத்துவது என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

அதுபோல், நல்லாசிரியருக்கான விருதில் அரசியல் தலையீடுகள், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் பரிந்துரைகள், சாதி, மதம் சார்ந்த வலியுறுத்தல்கள், கையூட்டு சார்ந்த குறுக்கு வழிகள் அறவே இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதுபோன்ற உள்நோக்கத்துடன் அரசியல்வாதிகளின் கையைப் பிடித்து, காலைப் பிடித்து, காக்காய்ப் பிடித்து, காசு கொடுத்து வாங்கப்படும் விருதில் நம்பிக்கையற்ற உண்மையிலேயே மாணவர்களும் பெற்றோர்களும் சமுதாயத்தினரும் போற்றத்தக்க நல்லாசிரியப் பெருமக்கள் பலரும் இத்தகைய அரசியல் குறுக்கீட்டு நடைமுறைகள் காரணமாக, 'நல்லாசிரியர் விருதே வேண்டாம்' என்று ஒதுங்கிச் செல்லும் நோக்கும் போக்கும் எண்ணத்தக்கது.

மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் விருது என்பது தானாகப் பெறப்பட வேண்டும் தவிர, தாமே வலிய சென்று வாங்கப்படக் கூடியதாக இருக்கக் கூடாது. விருதிற்காக வரையறை செய்யப்பட்ட படிவத்துடன் தக்க சான்றாதாரங்களுடன் புத்தக வடிவில் கருத்துருக்கள் நான்கு அல்லது ஐந்து படிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியரே தயாரித்து அளிக்கப்பட வேண்டும் என்பதும் அதற்காக ஆயிரக்கணக்கில் ஆகும் செலவினங்கள், மெனக்கெடல்கள், கால விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தேசிய நல்லாசிரியர் விருது முன்மொழிவுகள் அனைத்தும் முழுவதும் இணைய வழியில் நடைபெறுவது போல் தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில நல்லாசிரியர் விருதிற்கும் எதிர்வரும் காலங்களில் கடைபிடிப்பது நல்லது.

எனினும், விருது என்பது அது வழங்கப்படும் முறைமைகளாலேயே பெருமை அடைகிறது. அந்தவகையில் விருதுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்ட ரூபாய் பத்தாயிரம் என்பதில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் எல்லோருக்குமான விடியல் அரசு அதை ரூ 50,000/ ஆக உயர்த்தியும் வெள்ளிப் பதக்கமும் நல்ல கேடயமும் அடங்கிய பாராட்டுச் சான்றிதழுடன் நல்லாசிரியர் விருதாளர்கள் அனைவரையும் பெருமைப்படுத்துவதென்பது அரசின் தலையாயக் கடமையாகும். ஏனெனில், நடைமுறையில் விருது பெறும் பலரும் தாம் பெற்ற விருதுத்தொகையை முழுவதும் அதற்கு காரணமாக இருந்த பள்ளிக்கே நன்கொடையாக அளித்து வருவது அறியத்தக்கது. இதனால் அவர்கள் பணிபுரியும் பள்ளி தாமாகவே மேலும் தன்னிறைவு அடைந்து அரசாங்கத்தின் நிதிச்சுமை மீது மேலும் ஒரு புதிய சுமை வைப்பது வெகுவாகக் குறையும்.

மேலும், மாநில நல்லாசிரியர் விருதாளர்களின் பிள்ளைகள் அரசு உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் கலை - அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சேரவும் படிப்பைத் தொடரவும் கல்விக் கட்டணத்தில் முழுவிலக்குச் சலுகை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.

அதுபோல், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மீது எதிர்வரும் காலங்களில் ஏதேனும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்ற நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு வரும் பட்சத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட விருதையும் வழங்கப்பட்ட பரிசுத்தொகைக்கு ஈடாக இருமடங்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் கட்டாயம் திரும்பப் பெற்று, அந்த ஆண்டில் விருது பெறும் வாய்ப்பை இழந்தோருக்கு நடைமுறையில் உள்ளவாறு வழங்கப்படுதல் வேண்டும். அதுவே, விருதுக்கும் நல்ல ஆசிரியப் பணிக்கும் அரசு செய்யும் தக்க மரியாதையாகும். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பும் விருப்பமுமாகும்.

எழுத்தாளர் மணி கணேசன்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H