பெரும்பாலான மக்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும், அதற்காக அளவுக்கு மீறி சாப்பிடுவது என்பது உடலுக்கு தீங்கினை விளைவிக்கக்கூடும்.
அசைவ உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு அசைவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் அதிக யூரிக் அமிலம், இரத்தத்தில் காணப்படும் கழிவுப் பொருள் தான் யூரிக் அமிலம் ஆகும். பியூரின்கள் எனப்படும் சில இரசாயனங்களை உடல் உடைக்கும்போது இது உருவாகிறது, அதிக யூரிக் அமில அளவு ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் கீல்வாதம் நோய்க்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக புரதம் மற்றும் அதிக ப்யூரின் உணவுகளை உட்கொள்வது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். இறைச்சி போன்ற அசைவ உணவுகள் உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கும் பியூரின்கள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். யூரிக் அமில பிரச்சனை இருப்பவர்கள் குறைந்த அளவில் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் உணவு மற்றும் மதுப்பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். யூரிக் அமிலம் கல்லீரலில் இருந்து உற்பத்தியாகி சிறுநீரகம் மற்றும் சிறுநீர் வழியாக செல்கிறது. நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனை மற்றும் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுவது ஆகிய மூன்று காரணங்களும் ஆகும்.
யூரிக் அமில அதிகரித்திருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:
- உடலில் வலி அல்லது வீங்கிய மூட்டுகள்
- மூட்டுகளில் சூடான உணர்வு
- மூட்டுகளைச் சுற்றியுள்ள தோல் நிறமாற்றம் அடைதல்
- முதுகு வலி
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீரில் துர்நாற்றம்
- குமட்டல் அல்லது வாந்தி
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்துதல்:
- அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்
- சர்க்கரை நிறைந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- தினசரி உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- அடிக்கடி மருத்துவரிடம சென்று உடலை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.