'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாது.
பொதுவாக மனித உடல் 60% நீரால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தேவையான அளவு தண்ணீர் குடித்து தங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பல தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
பல் துலக்குவது மிக முக்கியமான அடிப்படை சுகாதாரப் பழக்கங்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்க நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். எழுந்தவுடன் ஒரு முறை மற்றும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு முறை பல் துலக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்பதும் பொதுவாக நாம் பின்பற்றி வரும் பழக்கமாக இருக்கிறது.
பெரும்பலான மக்கள் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், தூங்கி எழுந்தவுடன் உமிழ்நீரில் பாக்டீரியாக்கள் இருப்பதால் பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடிக்கக்கூடாது என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், பல் துலக்கும் முன் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால், உங்கள் உமிழ்நீர் வயிற்றுக்குள் செல்கிறது. இதன் விளைவாக அதிலுள்ள அதிக அமில உள்ளடக்கம் பாக்டீரியாவைக் கொல்லும். எனவே பல் துலக்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர்.
பல் துலக்குவதற்கு முன்பு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும் மற்றும் உடலில் இருந்து பல வகையான நோய்களும் நீங்குவதாகக் கூறப்படுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். இது நோய்கள் மற்றும் கிருமிகளிலிருந்து உங்கள் உடலை சிறப்பாக எதிர்த்துப் போராட உதவும். இதனால், எந்த நோய்தொற்றும் ஏற்படாமல் நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம்.
உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் அதிக தண்ணீர் குடிப்பதும் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் தண்ணீர் குடிப்பது, நச்சுகள் மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உங்கள் சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும். மேலும், உடலில் புதிய செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதால், உங்கள் சருமமும் பளபளப்பாக மின்னும்.
தண்ணீர் குடிப்பது, உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் குவிவதைத் தடுக்கிறது மற்றும் துவாரங்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. வாயில் உமிழ்நீர் இல்லாததால், நமது வாய் முற்றிலும் வறண்டுவிடும், இது ஹலிடோசிஸ் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், வாய் துர்நாற்ற பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்த பிறகு, உங்கள் குடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கான தூண்டுதலை நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் குடல்கள் சுத்தமாக இருக்கும். இதனால், நீங்கள் எந்த மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சந்திக்க மாட்டீர்கள்.
நீங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக விரைவான செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் ஏற்படுகிறது. இது நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். மேலும், தினமும் காலையில் தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பி, காலையில் அதிகம் சாப்பிடத் தூண்டும் உணர்வைத் தடுக்கிறது. இது உங்கள் உடல் எடையை குறைக்கவும், சரியாக நிர்வகிக்கவும் உதவுகிறது.
தண்ணீர் குடிப்பது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை திறம்பட குறைக்கிறது. மேலும் இது குடலை சுத்தப்படுத்தி, பெருங்குடல் தொற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது. உடல் பருமன், மலச்சிக்கல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.