திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் 133 அடி திருவள்ளுவர் சிலையை 40 நிமிடங்களில் செய்து உலக சாதனை:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்
திருவள்ளுவருக்கு மரியாதை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த
வரிசையில் மேட்டுபாளையத்தில் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய
பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை குறித்த செய்தியை இப்போது பார்க்கலாம்.
குறள் படைத்த வள்ளுவனை, குறள் கொண்டே சிலையாக வடித்து மரியாதை சேர்த்திருக்கின்றனர் மேட்டுபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்...ஒரு மாணவருக்கு 3 பானைகள் என 1330 குறள்களையும் 3990 பானைகளில் எழுதி அதை ஒன்றாக்கி 133 அடியில் சிலை இவர்கள் வடித்துள்ளனர்.
நாற்பதே நிமிடங்களில் மாணவர்கள் உருவாக்கிய வள்ளுவர் சிலையின் பிரம்மாண்டம் பார்ப்பவர்களை வியக்க வைத்தது. எலைட் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவர்களின் சாதனைகளை கண்கானித்தனர்.
உலக சாதனையை தாண்டி திருக்குறளின் நன்னெறிகளை மாணவர்களுக்கு உணர்த்தவே இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். உலகப் பொதுமறைக்கு ஓர் உன்னத மரியாதையை இந்த மாணவர்கள் சேர்த்துள்ளனர்.