உளுந்தூர்பேட்டை ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.சென்னை மற்றும் திருவள்ளூவர் பல்கலை கழகங்களின் விவசாய
சிண்டிகேட் உறுப்பினர் கருணாநந்தன் கலந்து கொண்டு, முதுகலை மாணவர்கள்
மற்றும் இளங்கலை மாணவர்கள் உள்ளிட்ட 614 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி
பாராட்டினார்.
பின்னர் சிண்டிகேட் உறுப்பினர் கருணாநந்தன் பேசியதாவது :
மாணவர்கள்
கல்வியறிவோடு, தன்னம்பிக்கையையும் வளர்த்து கொள்ள வேண்டும். கடவுளிடம்
நம்பிக்கையில்லாதவர்கள் எல்லாம் நாத்திகர்கள் அல்ல, தன்னம்பிக்கை
இல்லாதவர்கள் தான் நாத்திகர்கள். மாணவர்கள் கல்வி கற்பதின் பின்னணியில்
பணம் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளனர்.
வேலை வாய்ப்பிற்காகவும், தேர்வுக்காக மட்டும் படிக்காமல்
அறிவை வளர்த்து கொள்ளும் வகையில் கல்வி கற்க வேண்டும். கற்பிக்கும் கல்வி
இச்சமுதாயத்திற்கு பயன்படவேண்டும். படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு
சென்று அங்கேயே இருந்துவிடாதீர்கள். படித்து நமது சமுதாயத்திற்கு
தேவையானவற்றை செய்யுங்கள்.
மாற்ற வேண்டும், மாற்றமில்லாமல் வாழ்க்கை இல்லை. பண்பாடு
இருக்க வேண்டும். அதே நேரத்தில் பழமையானது என்று அதையே பின்பற்றி கொண்டு
இருக்கக் கூடாது. பழமையானவற்றை மாற்றி கொள்ளவேண்டும்.
படிக்காதவர்களை தரம் தாழ்த்தி பார்க்காதீர்கள். ஏனெனில்
படிக்காத பல மேதைகள் உள்ளனர். படிப்பில் தன்னம்பிக்கை தேவை. மனிதன்,
மனிதனாக வாழவேண்டும். இவ்வாறு கருணாநந்தன் பேசினார். பல்கலை கழக அளவில்
முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்ற கல்லூரி மாணவி சுபாசாந்தினி
கவுரவிக்கப்பட்டார்.