பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ. 4.37 லட்சம் ஊக்கத்தொகை:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து பிளஸ் 2
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 4.37 லட்சம் ஊக்கத்தொகை
வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2012-13-ம் ஆண்டு 32 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 6,510 பேர் பிளஸ்
2 தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 25 பள்ளிகள் 80 சதவீதத்துக்கு மேல்
தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன.
இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 4.37 லட்சம்
மதிப்புள்ள ஊக்கத் தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
இதில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் (198 மதிப்பெண்கள்)
பெற்ற செல்வஜோதி, சென்னை பள்ளிகளில் முதலிடம் (1145 மதிப்பெண்கள்) பெற்ற
வீரசெல்வி ஆகியோருக்கு தலா ரூ. 3,000 வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த பி. நித்யா மற்றும் சி. பிரியா ஆகியோருக்கு (1142
மதிப்பெண்கள்) தலா ரூ. 2,500 வழங்கப்பட்டது. 1138 மதிப்பெண்கள் பெற்று
3-ம் இடம் பிடித்த ஆயிஷா சித்திகாவுக்கு ரூ. 2,000 வழங்கப்பட்டது.
மேலும் 1000 மதிப்பெண்கள் பெற்ற 242 மாணவர்களுக்கு தலா ரூ. 1,500-மும்
ஒரு பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்ற 13 மாணவர்களுக்கு தலா ரூ. 1,000-மும்
வழங்கப்பட்டது. இதில் மொத்தம் ரூ. 4.37 லட்சம் மாணவர்களுக்கு
ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பா. பெஞ்சமின், இணை ஆணையர் (கல்வி) தி.ந.
வெங்கடேஷ், கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








