திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி அடுத்த வாரம் திறப்பு: சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்:
திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு
மருத்துவக் கல்லூரி அடுத்த வாரத்தில் திறக்கப்படும் என்று தமிழக அரசின்
சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.ரூ.130 கோடியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப்
பணிகளை வெள்ளிக்கிழமை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்
அவர் செய்தியாளர்களி்டம் கூறியது:
திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி
மாணவர் சேர்க்கைக்கு புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகம்
அனுமதி வழங்கியது.
இதையடுத்து எம்பிபிஎஸ் முதலாமாண்டில் 100 மாணவர்களை சேர்ப்பதற்கான
கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. எனவே, மருத்துவக் கல்லூரி நடைபெறத்
தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?, மாணவ-மாணவிகள் தங்க விடுதி
வசதிகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதைப் பார்வையிட வந்தேன்.
மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன. எனவே, அடுத்த வாரத்தில் இக் கல்லூரியை தமிழக முதல்வர்
ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைக்கிறார் என்றார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன், மருத்துவக் கல்லூரி
முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் புகழேந்தி, இருப்பிட மருத்துவ
அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெளர்ணமி தினத்தில் திறப்பு:
அரசு மருத்துவக் கல்லூரியை இம் மாதம் 20-ம் தேதி திறக்க தமிழக அரசு
முடிவு செய்துள்ளதாம். அன்றைய தினம் செவ்வாய்க்கிழமையாக இருந்தாலும் கூட,
முழு பெளர்ணமி என்பதால் அன்றைய தினமே மருத்துவக் கல்லூரியை காணொலி மூலம்
திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகள்
தெரிவித்தனர்.








