ஆக்ஸ்போர்டு பல்கலையில் தமிழ் ஆய்வு இருக்கை: லண்டன் பேராசிரியர்கள் விருப்பம்:
ஆக்ஸ்போர்டு பல்கலையில், சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு, ஆய்வு இருக்கைகள் இருப்பதைப் போன்று, தமிழ் மொழிக்கும் ஆய்வு இருக்கை அமைக்க, ஆர்வமாக இருப்பதாக, அப்பல்கலைக் கழக பேராசிரியர்கள், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனரிடம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள, உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர்,
விஜயராகவன், இம்மாதம், 13ல், லண்டனில் நடந்த, உலகத் தமிழ் இயல் ஆய்வு
மாநாட்டில் கலந்து கொண்டார். அதில், பல்வேறு நாடுகளில் உள்ள, தமிழ்
அறிஞர்கள் கலந்து கொண்டனர். பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு சென்றார்.
அங்குள்ள சமஸ்கிருத பேராசிரியர் கிறிஸ்டோபர், எகிப்தியல் பேராசிரியர் ஜான்
பெய்னி ஆகியோரை சந்தித்து உரையாடினார்.
அவர்களிடம், தமிழகத்தில், ஜி.யு.போப் பெயரில் விருது வழங்கப்படுவது
குறித்து, விஜயராகவன் தெரிவித்தவுடன், பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலையில், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளுக்கு,
ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டதைப் போல, தமிழ் மொழிக்கும் ஆய்வு இருக்கை
அமைக்க, ஆவலாக இருப்பதாக, பேராசிரியர்கள் தெரிவித்தனர். இயக்குனர்
விஜயராகவன், தமிழக முதல்வரின் சாதனைகள் குறித்த மலரை, அவர்களிடம்
வழங்கினார்.