புத்தகம் தான் சிறந்த நண்பன்: இளசை சுந்தரம் பேச்சு:
மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் புத்தகத் திருவிழாவில், எழுத்தாளரும், பேச்சாளருமான இளசை சுந்தரம் பேசியதாவது:மக்கள் தொகை அதிகரிக்கிறது; ஆனால், உண்மையான மக்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். மனிதநேயமற்றவர்களை, மனிதனாக மாற்ற, புத்தகங்களால் மட்டுமே முடியும். வரலாறு, வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல; சாதனையை தந்து போனவர்களின் தொகுப்பு.
சிரமப்படாமல், சிகரத்தை தொட முடியாது. நம் முன்னோர்கள், நல்ல வாசிப்பு
பழக்கத்தை கையாண்டனர். இன்றைய தலைமுறை, படிக்க ஆர்வம் இருந்தும், வாய்ப்பு
இல்லாமல் தவிக்கிறது. தூக்கு மேடைக்கு செல்லும் முதல் நாள் வரை புத்தகம்
படித்தவர், பகத்சிங். இறக்கும் தருவாயில் கூட, நடப்பு தகவலை அறிய புத்தகம்
படித்தவர், சாக்ரடீஸ்.
அறிவை பெற மட்டுமல்ல, அறிந்து கொள்ளவும், புத்தகம் அவசியம். புத்தக
அறிவை நாமும் பெற வேண்டும்; நம் சந்ததிக்கும் தர வேண்டும். தன்னம்பிக்கை,
மனிதநேயம், பழகுமுறை, வரலாற்று பதிவு, ஆராய்ச்சி நூல்களை படிக்கும் போது,
தரமான தலைமுறை உருவாகும். புத்தகம் போன்ற சிறந்த நண்பன், கிடைப்பதும்,
பழகுவதும் அரிது.
மாணவர்கள், சரித்திரம் படித்தால் மட்டும் போதாது; படைக்க வேண்டும்.
அதற்கு பேச்சாற்றல் அவசியம் என்றால், பேச்சாற்றலை பெற, புத்தகம் அவசியம்.
சுதந்திரத் தினத்தில் நடிகை பேட்டியையும், சினிமாவின் சுவையான
சம்பவங்களையும் சேனலில் ஒளிபரப்புகிறார்கள். சுதந்திரம் பெற்ற சோக
சம்பவங்களை அல்லவா, அன்று ஒளிபரப்ப வேண்டும்?
பிறகு எப்படி நம் தலைமுறைக்கு, சுதந்திரத்தின் பின்னணி தெரியும்?
அவர்கள் ஒளிபரப்பவில்லை; நாம் ஏன் ஒளிபரப்பவில்லை என, கேட்கவில்லை. தவறு,
நம் மீதும் இருக்கிறது. வளைந்து கோணலாக இருக்கும் மரத்தை, நூல்பிடித்தபடி
நறுக்குவார்கள்; பின் அது, அழகாக இருக்கும். அதுபோல் தான், மனதால் வளைந்து
கிடைக்கும் மனிதனை, "நூல்" மட்டுமே நேர்படுத்தும், என்றார்.
முன்னதாக பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது பேசுகையில், "புள்ளிவிபரங்களை
சேகரிப்பதில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். அதன் மூலம் அறிவு
கிடைக்கிறது என்பதில் மாற்றமில்லை; ஆனால், ஞானம் என்ற மூன்றாவது நிலையை
நாம் அடைகிறோமா என்றால், இல்லை. படைப்புகள், அந்த படைப்பாளரின் எண்ணங்கள்,
அவர்களின் வாழ்க்கையை தெரிவிக்கிறது. அவற்றை நாம் படிக்கும் போது, நம்
வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இதனால், நம் வாழ்க்கைக்கு
தேவையான அனுபவத்தை, புத்தகம் வழியே, அரிய படைப்புகள் தருகின்றன" என்றார்.







