தொழிற் கல்லூரி விவரங்களை வெளியிட வழிமுறைகளை உருவாக்க வேண்டும்: ஐகோர்ட்
தொழிற் கல்லூரிகளின் அங்கீகாரம், அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை வெளியிடும் வகையில், வழிமுறைகளை உருவாக்க வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.வேலூரில், செயின்ட் ஜான் நர்சிங் கல்லூரி உள்ளது. நர்சிங் படிப்புக்கு, 30, மாணவர்களை சேர்க்க, இந்தக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், 50, மாணவர் சேர்க்கப்பட்டனர். கூடுதலாக சேர்க்கப்பட்ட, 20, மாணவர்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவும் கோரி, ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: இந்தக்
கல்லூரிக்கு போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், மாணவர்களின்
எண்ணிக்கையை, 50ல் இருந்து, குறைத்தது. ஏழை மாணவர்களை, இந்தக் கல்லூரி
ஏமாற்றியுள்ளது. தங்களை, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, தற்போது
மாணவர்கள் கோருகின்றனர். அனுமதிக்கப்பட வேண்டிய எண்ணிக்கை தெரியாமல், இதில்
மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில், ஆசிரியர்
கல்விக்கான தேசிய கவுன்சில், நர்சிங் கவுன்சில், பார்மசி கவுன்சில்,
ஏ.ஐ.சி.டி.இ., உள்ளிட்ட அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின்
பட்டியலை, அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையோடு, முன்கூட்டி வெளியிட
வேண்டும். அப்போது தான், பொது மக்களுக்கு கல்லூரிகள் பற்றி அறிந்து கொள்ள
முடியும்.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, மூன்று நாட்களுக்குள், தொழிற்
கல்லூரிகளின் பட்டியலை, சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளியிட வேண்டும்.
இதற்கான வழிமுறைகளை, சம்பந்தப்பட்ட அமைப்புகள் கொண்டு வர வேண்டும்.
முறைகேடுகளில் ஈடுபடும் கல்லூரிகளை தண்டிக்க, தகுந்த வழிமுறைகள் இல்லை.
அங்கீகாரம் இல்லாமல், விதிமுறைகளை மீறி, மாணவர்களை சேர்க்கும் கல்லூரிகளின்
நிர்வாகம், மாணவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, வகை செய்யப்பட வேண்டும்.
மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
மாணவர்களை தேர்வு எழுத, பல்கலைகழகம் அனுமதி மறுக்கும் போது தான்,
சட்டவிரோத சேர்க்கை வெளிச்சத்துக்கு வருகிறது. அப்போது தான், மாணவர்களும்
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர். கடைசியில், பணத்தையும், நேரத்தையும்,
மாணவர்கள் இழக்கின்றனர். இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டு உள்ளார்.







