திருக்குறளை தேடும் குழந்தைகள்: ஞானசம்பந்தன் பெருமிதம்:
திருக்குறள் புத்தகம் வாங்க குழந்தைகள் ஆர்வம் காட்டுவது தமிழுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது" என பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார்.மதுரை புத்தகத் திருவிழாவில் தினமலர் நாளிதழ் அமைத்துள்ள (54ஏ) ஸ்டாலில், வாடிக்கையாளர்கள் வாங்கும் புத்தகங்களில் தினமும் ஒரு நட்சத்திர எழுத்தாளர் கையெழுத்திடுகிறார். நேற்று பேராசிரியர் ஞானசம்பந்தன், கையெழுத்திட்டார்.
அவர் பேசியதாவது: சங்க காலத்திலும், சமகாலத்திலும் பெருமை பெற்ற நகரம்
மதுரை மட்டுமே. இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய அதே துடிப்பை, இந்நகரம்
இன்றும் பெற்றுள்ளது. அது பழமைக்கு பழமையாகவும், புதுமைக்கு புதுமையாகவும்
விளங்குகிறது. இந்நிகழ்ச்சியில் தினமலர் நாளிதழ், பேச்சாளர்கள்,
எழுத்தாளர்களை ஸ்டாலுக்கு வரவழைத்து வாசகர்களின் புத்தகங்களில் கையெழுத்திட
வைப்பது புதுமையானது.
புத்தக ஸ்டால்களுக்கு குழந்தைகள் அதிக ஆர்வமுடன் வருகின்றனர். அவர்களில்
அதிகமானோர் திருக்குறள் புத்தகத்தை வாங்கி உள்ளனர். இது தமிழுக்கும்,
திருவள்ளுவருக்கும் பெருமை தருவதாகும். கல்லூரி மாணவர்கள் தன்னம்பிக்கை,
சுயமுயற்சி, போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்களை வாங்குகின்றனர். பெண்கள்
கவிதையை நேசிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் வாங்கிய புத்தகங்களை நான்
படித்துள்ளேனா என அறிந்து, அவற்றை வாங்க முயற்சிக்கிறேன். வாசகர்கள்
புத்தகங்கள் வாங்குவதை ஒரு கலையாக கருதி செயல்பட வேண்டும், என்றார். புத்தக
திருவிழாவிற்கான ஊடக உதவியை தினமலர் நாளிதழ் வழங்குகிறது.
மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும்
புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர
உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில், இந்த
நிகழ்ச்சி நடக்கிறது. இன்று கையெழுத்திடுபவர்: எழுத்தாளர் மதுமிதா







