மருத்துவ படிப்பில் இடம் கோரிய மாணவியர் மனுக்கள் தள்ளுபடி:
மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அனுமதி கோரிய, நான்கு மாணவியரின் மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.திருவண்ணாமலை மாவட்டம், இஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த, நளினி என்பவர் தாக்கல் செய்த மனு: நான் ஒரு மாற்றுத் திறனாளி. கடந்த மாதம், 18ம் தேதி, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டேன். "75 சதவீத ஊனம் உள்ளது; எனக்குத் தகுதியில்லை" என தெரிவித்தனர். மாவட்ட மருத்துவ போர்டு அளித்த சான்றிதழின்படி, "65 சதவீதம் ஊனம்" என கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, மாவட்ட மருத்துவ போர்டு சான்றளித்த பின், தேர்வுக் குழுவால்
அமைக்கப்பட்ட மருத்துவக் குழு முன், ஆஜராக கூறியது சரியல்ல. எனக்குத் தகுதி
உள்ளது. எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் ஒதுக்க வேண்டும். வழக்கு
விசாரணை முடியும் வரை, ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு,
மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோன்று, அன்புமணி, தேவிபிரியா, சங்கீதா ஆகியோரும், தனித்தனியே
மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். கவுன்சிலிங்கின் போது, நிபுணர்கள் குழு,
மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு, விளக்கக் குறிப்பேட்டில் வகை செய்யும்
பிரிவை எதிர்த்தும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் டி.கிருஷ்ணகுமார், "மாவட்ட
மருத்துவ போர்டில் நிபுணர் கிடையாது. வழக்கமாகச் சான்றிதழ்களை
வழங்குகின்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிமுறைகளின்படி,
கவுன்சிலிங்கின் போது, ஏற்கனவே மாவட்ட மருத்துவ போர்டு வழங்கிய சான்றிதழ்
குறித்து ஆய்வு செய்யப்படுகிறது" என்றார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: நிபுணர்
குழுவுக்கு எதிராக, கடுமையான குற்றச்சாட்டுக்களை, மனுதாரர்கள்
கூறியுள்ளனர். தங்களை விரிவாகப் பரிசோதிக்கவில்லை என்றும், புகைப்
படங்களைப் பார்த்து முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். எனவேதான்,
சிறப்பு மருத்துவக் குழுவை நியமிக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு
உத்தரவிட்டேன்.
இந்தச் சிறப்பு மருத்துவக் குழு, மனுதாரர்களைப் பரிசோதித்து, "மாற்றுத்
திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்ய, இவர்களுக்குத்
தகுதியில்லை" என தெரிவித்து உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு என, 3 சதவீத
இடங்களை, அரசு ஒதுக்கி உள்ளது. உன்னத காரணத்திற்காக, இந்த ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளது. ஒதுக்கீட்டின் கீழான இடங்களை, தகுதியுள்ள
நபர்களுக்குத் தான் கொடுக்க வேண்டும்.
மாவட்ட மருத்துவக் குழு சான்றிதழ் அளித்துள்ளது என்பதற்காக, அதன்
அடிப்படையில் மட்டுமே, இடங்களைக் கொடுக்கக் கூடாது. விளக்கக்
குறிப்பேட்டில் குறிப்பிட்டுள்ள பிரிவின் அடிப்படையில் தான், மனுதாரர்கள்
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உள்ளனர். மாணவர்கள் பெற்ற மருத்துவச்
சான்றிதழை, நிபுணர் குழு உறுதி செய்வதற்கு, இந்த விளக்கக் குறிப்பேட்டில்
வகை செய்யப்பட்டு உள்ளது.
எனவே, மனுதாரர்கள் அளித்த விண்ணப்பங்கள், நிபுணர் குழுவின் ஆய்வுக்கு
உட்பட்டது. நிபுணர் குழுவை, தேர்வுக் குழு தான் நியமித்து உள்ளது. மாவட்ட
மருத்துவக் குழு அளிக்கும் சான்றிதழை, நிபுணர் குழு உறுதி செய்ய வகை
செய்வதற்கு, விளக்கக் குறிப்பேட்டில், குறிப்பிட்ட பிரிவை இடம் பெறச்
செய்தது சரி தான். எனவே, இரண்டாவதாக, நிபுணர் குழு மூலம், மருத்துவப்
பரிசோதனை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் தகுதி இல்லை.
கவுன்சிலிங்கின் போது, மருத்துவச் சான்றிதழை உறுதி செய்ய, நிபுணர்
குழுவை அமைக்க வகை செய்யும் பிரிவு செல்லும். இம்மனுக்கள், தள்ளுபடி
செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டு உள்ளார்.







