தண்ணீரை சேமிக்காவிட்டால் இந்தியா, சீனாவில் தட்டுப்பாடு : துணைவேந்தர் தகவல்:
காரைக்குடி அழகப்பா பல்கலையில், சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவன நிதி உதவியுடன், "இந்தியாவில் சிறு நீர்நிலைகளின் இன்றைய நிலை மற்றும் விளைவுகள்" என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் நடந்தது.விழாவுக்கு தலைமை வகித்து, பல்கலை., துணைவேந்தர் சேது சுடலைமுத்து பேசியதாவது: தொன்று தொட்டு, பாசன மற்றும் குடிநீர் தேவைக்கு, பயன்பட்டு வருகிற, சிறு நீர் நிலைகளை தூர்வாரி தொடர்ந்து பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்தியாவில் ஐந்து லட்சம் நீர் நிலைகள் உள்ளன. 2010-ல் 710 பில்லியன் கனமீட்டராக இருந்த தண்ணீர் தேவை, 2050ல் 1180 பில்லியன் கன மீட்டராக இருக்கும், என இந்திய திட்டக்குழு மதிப்பிட்டுள்ளது. தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காவிடில், இந்தியா, சீனா, சில ஆப்ரிக்க நாடுகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், என்றார்.
கர்நாடக அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கேவி.ராஜூ பேசும் போது,
"தென் ஆசியாவில் குளங்கள் பெரும்பாலும், 7 மற்றும் 14ம் நூற்றாண்டுக்கு,
இடையில் உருவாக்கப்பட்டவை. தென் இந்தியாவில் நிலத்தின் கீழ்நிலை, மேல்நிலை
பகுதிகள், தண்ணீரை சேமிப்பதற்கும், பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டன.
தென் இந்திய மாநிலங்கள் தண்ணீரின் தேவைக்கு, குளங்கள் மற்றும் கண்மாய்களை
சார்ந்தே இருக்கின்றன. கடை மடைகளிலுள்ள விவசாயிகள், தண்ணீர் குறைவாக
எடுத்துக் கொள்ளும், பயிர்களை பயிரிட்டு தண்ணீரை சேமிக்க வேண்டும்,
என்றார்.
பெங்களூரு சமூக பொருளாதார மாற்றம் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்
தேஸ்பாண்டே, பதிவாளர் மாணிக்கவாசகம் பங்கேற்றனர். பேராசிரியர்
நாராயணமூர்த்தி வரவேற்றார். தர்மலிங்கம் நன்றி கூறினார்.