இரண்டாமாண்டு டி.டி கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கலாம்:
டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010-11ம் ஆண்டில் சேர்ந்த மாணவர்கள், இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூர்மாவட்டம் குன்னவலத்தில், கடந்த, 2010ல், டி.டி., மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது. 2010-11ல், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்தது. இதன்படி, 100 மாணவர்கள் சேர்ந்தனர். அடுத்த ஆண்டுகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகம், மாணவர்களைச் சேர்த்து வகுப்புகளை நடத்தி வந்தன.
இந்நிலையில், "டி.டி., மருத்துவக் கல்லூரி, எங்கள் கட்டுப்பாட்டின் கீழ்
இல்லை" என, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, பகிரங்கமாக அறிவித்தது.
கல்லூரியும் இழுத்து மூடப்பட்டது. விவரம் தெரியாமல் சேர்ந்த மாணவர்களின்
எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது. "அரசு கல்லூரிகளில் சேர்க்க
வேண்டும்" என, அவர்கள் போராடி வருகின்றனர். கல்லூரியில், 2010-11ம் ஆண்டில்
சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். இவர்களை அரசு கல்லூரிகளில் சேர்க்க
அனுமதி கோரி, மருத்துவக் கல்வி இயக்ககம், எம்.சி.ஐ.,க்கு கடிதம்
அனுப்பியுள்ளது; அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.
அவர்களின் எதிர்காலம் கருதி, இரண்டாம் ஆண்டு தேர்வை எழுத, மருத்துவக்
கல்வி இயக்ககம் அனுமதி அளித்தது. சமீபத்தில், இரண்டாம் ஆண்டு
தேர்வெழுதினர். இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வு இன்னும் நடக்கவில்லை.
இந்த நிலையில், செய்முறைத் தேர்வு எழுத வசதியாக, அரசு மருத்துவக்
கல்லூரிகளில் பயிற்சி பெற, மருத்துவக் கல்வி அலுவலக இயக்ககம் அவர்களுக்கு
அனுமதி அளித்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி - 22; ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 20;
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 15; செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி -
10 பேர் என, மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், நேற்று
கல்லூரிகளுக்குச் சென்றனர். இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர்
ராதாகிருஷ்ணன் கூறுகையில், ""2010-11ல் சேர்ந்த, டி.டி., மருத்துவக்
கல்லூரி மாணவர்கள் மட்டும், இரண்டாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கு
தயாராகும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். பயிற்சி முடிந்ததும், செய்முறைத் தேர்வு நடக்கும். எம்.சி.ஐ.,
ஒப்புதல் கிடைத்ததும், அரசு மருத்துவக் கல்லூரிகளில், இவர்கள் சேர்த்துக்
கொள்ளப்படுவர்" என்றார்.







