மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கருத்தரங்கம் நாளை தொடக்கம்:
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் புதன்கிழமை (நவ.20) தொடங்கி நவ.23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மதுரம் நாராயணன் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மையத்தின் இயக்குனர் ஜெயசந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியது:
குழந்தைகளுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு அதனைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அந்தக் குடும்பம் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்படையும்.
இப்போதுள்ள மருத்துவ வசதியைக் கொண்டு கருவில் இருக்கும் குழந்தையின் மன நலத்தை அறிந்துகொள்ள முடியும். இந்த அறிவியல் வசதியைப் பயன்படுத்தி குழந்தை பிறந்ததில் இருந்து 6 வயதுக்குள் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மையத்தில் அவர்களை இணத்துகொள்ள வேண்டும்.
மதுரம் நாராயணன் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மையத்தில் பிறந்ததில் இருந்து 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இம் மையத்தில் மன நலம் குறைந்த குழந்தைகள் தங்களது 2 வயது வரையில் தாயாருடன் இம்மையத்தில் பயிற்சி பெறலாம். இந்தக் குறிப்பிட்ட வயதுக்குள் அளிக்கப்படும் பயிற்சிகள் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் வாழ் நாள் முழுவதும் தங்களது அன்றாட வேலைகளை செய்துகொள்ள உதவும்.
குழந்தைகளின் மன மற்றும் உடல் வளர்ச்சிகளை 6 வயதுக்குள் சரி செய்துகொள்ள வேண்டும். எங்கள் மையத்தில் பயிற்சி பெறும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் சாதாரண பள்ளிகளிலும் படிக்கும் வகையில் அவர்களுக்குத் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் இப்போது 100 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர், 17 சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் உள்ளனர். நவ.20-ஆம் தொடங்கி நவ.23 தேதி வரை நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் வெளிநாடுகளில் இருந்து நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர் என்றார் ஜெயசந்திரன்.
இந்தச் சந்திப்பில் மதுரம் நாராயணன் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மையத்தின் இயக்குநர்கள் ஜெயா கிருஷ்ணசாமி, பிரபாகர் ராவ், எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.