பாலிடெக்னிக் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதி பெற தாமதத் தொகையுடன் மார்ச் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் முதுநிலை பட்டையப் படிப்புகளை நடத்தும் நிறுவனங்களை புதிதாகத் தொடங்க ஏ.ஐ.சி.டி.இ.-யின் அனுமதி பெறுவது அவசியம். இதுபோல் ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி நீட்டிப்பு பெற வேண்டும்.
வரும் 2014-15 ஆம் கல்வியாண்டில் இந்த அனுமதி மற்றும் அனுமதி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 15 கடைசித் தேதி என ஏஐசிடிஇ முன்னர் அறிவித்திருந்தது.
பின்னர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த கால அவகாசம் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏஐசிடிஇ வழங்கியுள்ளது. அதன்படி, புதிய அனுமதி மற்றும் அனுமதி நீட்டிப்பு விண்ணப்பங்களை தாமதத் தொகையுடன் வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் கே.பி. ஐசக் தெரிவித்துள்ளார்.