கல்வி, மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு
முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் அவினாஷ் சுந்தர்
வலியுறுத்தினார்.
ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் அவினாஷ் சுந்தர் பேசியது: ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 21
நாடுகளை பெண் தலைவர்கள்தான் வழிநடத்தி வருகின்றனர். இந்தியாவில் உயர் கல்வி
பயில்வோரில் 50 சதவீதம் பேர் பெண்கள்.
ஆனால் கிராமப்புறங்களில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளில் 70 முதல் 80
சதவீதம் பேர் பெண்கள். இந்த நிலை மாற பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை
வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, அறிவியல் முன்னேற்றத்தில் பெண் விஞ்ஞானிகள்-2014 என்ற
கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
நிறுவனத்தின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 பணியாளர்கள் ஆவடியிலிருந்து
வேலூர் வி.ஐ.டி நிறுவனத்துக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினர்.
இதன் மூலம் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புத் துறையின் தன்னிறைவு குறித்த சாதனை விளக்கங்களை கூற உள்ளனர்.
விழாவில் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








