தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவிபெறும்
கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்.,
படிப்புகளுக்கு நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு மாநில அளவிலான கலந்தாய்வு
காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரியில் ஜூன் 19-முதல் ஜூலை 2-ஆம் தேதி
வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வரும், கலந்தாய்வுச் செயலருமான அ.மாலா செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிப்
பொறியியல் கல்லூரிகள் என 534 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் நேரடி
இரண்டாமாண்டு சேர்க்கைக்காக 1 லட்சம் இடங்கள் உள்ளன. நேரடி இரண்டாமாண்டு
சேர்க்கைக்காக பூர்த்தி செய்யப்பட்ட 21,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவருக்கும் இக்கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கான
இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இக்கலந்தாய்வுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் வாரியாக தரவரிசைப்பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் இக்கல்லூரியின் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இதில் தங்கள் தரவரிசை குறித்து மாணவர்கள் பார்த்துக்
கொள்ளலாம். மேலும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு வர அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலோ, தரவரிசைப்
பட்டியலில் பெயர் இல்லையென்றாலோ உரிய தகுதி இருந்து ஆதாரம் சமர்ப்பித்து
கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கணிதத்தை பாடமாகக் கொண்டு பி.எஸ்சி படித்த மாணவர்களுக்கு ஜூன் 19-ஆம்
தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரையும், விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள்
ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரையும்,
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்புப் பிரிவினருக்கும் கலந்தாய்வு
நடைபெறும்.
டிப்ளமோ கெமிக்கல் படித்தவர்களுக்கு 20-ஆம் தேதி காலை 8 மணி முதல் 10
மணி வரையும், டெக்ஸ்டைல்ஸ், லெதர், பிரிண்டிங் படித்தவர்களுக்கு காலை 10
மணி முதல் 12 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். டிப்ளமோ சிவில்
படித்தவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி 93.71 சதவீத கட்-ஆப் மதிப்பெண்ணில்
மதியம் 1.30 மணிக்கு தொடங்கி 22-ஆம் தேதி மாலை 6 மணிவரை 54.875 சதவீத
கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
டிப்ளமோ மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 96.215 சதவீத கட்-ஆப்
மதிப்பெண்ணில் ஜூன் 23 காலை 8 மணிக்கு தொடங்கி 27-ஆம் தேதி காலை 11 மணிவரை
54.584 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. டிப்ளமோ
எலெக்ட்ரிக்கல் படித்தவர்களுக்கு 98.75 சதவீத கட்-ஆப் மதிப்பெண்ணில் ஜூன்
27 அன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கி ஜூலை 2-ஆம் தேதி மாலை 6 மணிவரை 53.75
சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் வரை கலந்தாய்வு நடைபெற்று நிறைவடைகிறது.
மாணவர்கள் கலந்தாய்வுக்கு 1 மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும். 10-ஆம்
வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், டிப்ளமோ
சான்றிதழ், புரோவிஷனல், சாதிச்சான்று, நன்னடத்தை சான்று தேவைப்பட்டால்
இருப்பிடச்சான்று ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வந்து கலந்தாய்வில்
பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வுக்கு வந்து செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தில் கேன்டீன் வசதியும்
செய்யப்பட்டுள்ளது என்றார்.








