இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை
பட்டியலில் மீண்டும் சென்னை மாணவரே முதலிடம் பிடித்தார். இந்தாண்டு 271
மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில்
உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன.
இதில், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்
கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்து
73,687 மாணவர்கள் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு ஆர்முடன்
விண்ணப்பித்துள்ளனர். அதில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 423 விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலை உயர்கல்வித் துறை
அமைச்சர் பழனியப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில்
வெளியிட்டார்.
தரவரிசைப் பட்டியலில்
பொதுப்பிரிவில், சென்னையை சேர்ந்த சுந்தர் நடேஷ் முதலிடத்தையும், சென்னையை
சேர்ந்த அபிஷேக் இரண்டாவது இடத்தையும், ஈரோட்டை சேர்ந்த விஜயராம் மூன்றாவது
இடத்தை பிடித்துள்ளனர்.
தொழிற்பிரிவில்
சேலத்தை சேர்ந்த ஆனந்த் முதலிடத்தையும், கோவையை சேர்ந்த மெல்பா இரண்டாவது
இடத்தையும், கோவையை சேர்ந்த சங்கர் பிரபு மூன்றாவது இடத்தையும்
பெற்றுள்ளனர்.
இது குறித்து மாணவர்
சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் நிருபர்களிடம் கூறுகையில்
�பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூன் 27ல் தொடங்கி ஜூலை 28ம் தேதி
வரை நடைபெறுகிறது. கடந்தாண்டு 37 நாட்கள் கவுன்சலிங் நடைபெற்றது.
இந்தாண்டு 32 நாட்கள் நடக்கிறது. ஒரு நாளைக்கு 8 பிரிவுகளாக நடைபெறுகிறது.
கடந்தாண்டு கட்ஆப் மதிப்பெண்ணில் 200க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்கள் 11
பேர் எடுத்த நிலையில், இந்தாண்டு 271 பேர் பெற்றுள்ளனர்.
மாணவர்கள்
தங்கள் தரவரிசை பட்டியலில் பல்கலை இணையதளத்தில் சென்று விண்ணப்ப பதிவெண்,
பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். அதிலேயே
கவுன்சிலிங் எந்த தேதியில் நடக்கும் என்பதும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இது தவிர எஸ்எம்எஸ், தபால் மூலம் மாணவர்களுக்கு கவுன்சிலிங் குறித்த தகவல்
தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சாதனை மாணவர்கள்
மருத்துவ
மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்நிலையில்
நேற்று பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. மருத்துவ தரவரிசை
பட்டியலில் முதலாவதாக இருந்த சுந்தர் நடேஷ், இரண்டாவதாக இருந்த அபிஷேக்,
மூன்றாவதாக இருந்த விஜயராம், நான்காவதாக இருந்த மிதுன், ஐந்தாவதாக இருந்த
ஸ்ருதி, ஏழாவதாக இருந்த மைதிலி ஆகியோர் பொறியியலுக்கும்
விண்ணப்பித்திருந்ததால் இவர்களின் பெயர்கள் அதேவரிசையில் பொறியியல் தரவரிசை
பட்டியலிலும் இடம்பிடித்திருந்தது. ஸ்ருதியின் பெயர் எட்டாவதாகவும்,
மைதிலியின் பெயர் ஒன்பதாவதாக இடம் பெற்றிருந்தது.







