புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவம்,
பொறியியல் தொழில் படிப்புகளுக்கு சேர்க்கை நடக்கிறது. சென்டாக்
மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகையை அந்தந்த கல்லூரிகளுக்கு நேரடியாக
வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதேபோல் கடந்த இரு
கல்வியாண்டு கட்டணங்களை அந்தந்த கல்லூரிகளுக்கு நேரடியாக
செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு(2014&15) முழு
கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று சில மருத்துவம், பொறியியல் கல்லூரி
கள் மாணவர்களையும், பெற்றோர்களையும் வற்புறுத்தி வருகின்றன. மேலும்,
2013&14 கல்வியாண்டு தேர்வு நாளை(4ம் தேதி) துவங்க உள்ளது. கல்வி
கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு நுழைவு சீட்டு வழங்காமல்
இழுத்தடித்து வருவதாகவும் புகார் எழுந்தது.
இது
குறித்து மாணவர், பெற்றோர் நல சங்க தலைவர் பாலா, சுகாதாரத்துறை செயலர்,
உயர் கல்வித்துறை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும்,
முதல்வர் ரங்கசாமியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன்
தொடர்ச்சியாக கல்வி கட்டணத்தை மாணவர்களை கட்டாயப்படுத்தி வாங்க கூடாது
என்று உயர் கலவித்துறை அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை
இயக்குனர் கரிகாலன் அளித்துள்ள சுற்றறிக்கையில், சென்டாக் மூலம் தேர்வு
செய்யப்பட்ட மருத்துவம், பொறியியல் மாணவர்களின் 2012&13, 2013&14ம்
ஆண்டுக்கான கல்வி கட்டணம் அந்தந்த கல்லூரிகளுக்கு நேரடியாக
வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2, 3, 4ம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளிடம்
2014&15ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை மே 31ம் தேதிக்குள் கட்டாயம்
செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் வற்புறுத்தி வருவதாக
மாணவர், பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 2, 3,
4ம் ஆண்டு பயிலும் மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு, மதிப்பெண் பட்டியல்
வழங்கும் வரை நடப்பாண்டு கல்வி கட்டணத்தை கேட்டு வற்புறுத்தக்கூடாது. இதனை
அனைத்து கல்லூரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை புதுச் சேரி மாநிலத்தில் உள்ள 7 மருத்துவ கல்லூரிகள், 13 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில்
மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் கல்லூரிகள் மீது மத்திய
மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய மருத்துவ கவுன்சில், அகில இந்திய
தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றிற்கு மாணவர், பெற்றோர் நல சங்கம் சார்பில்
புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
சென்டாக் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு வற்புறுத்த கூடாது







