பெருந்தலைவர் காமராஜர் 1954 ல் ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். பொற்கால ஆட்சிக்கு அப்போது தான் பூபாளத்துடன் பொழுது புலர்ந்தது. தமிழகம் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
காமராஜர் அமைத்த முதல் அமைச்சரவையில் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ெஷட்டி,
மாணிக்கவேலு நாயக்கர், ராமநாதபுரம் ராஜா, ராமசாமி படையாச்சி, பரமேஸ்வரன்
ஆகிய 7 பேர் இடம் பெற்றனர். இந்தியாவிலே மிகச்சிறிய அமைச்சரவை மூலம்
செயற்கரிய ஆட்சி சாதனைகளை நிகழ்த்தியவர் காமராஜர் ஒருவரே.அறநிலையத்துறைக்கு
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பரமேஸ்வரனை அமைச்சராக்கி அன்றே சமூக
நீதிக்கு அடித்தளம் அமைத்தார். இட ஒதுக்கீடு பிரச்னையில் இந்திய அரசியல்
சட்டத்தின் முதல் திருத்தம் செய்ய நேருவை இணங்கச் செய்ததும் காமராஜரே
என்பதை நாடு மறக்கலாகாது.
முதல் சமூக விஞ்ஞானி :
அறியாமை
இருட்டில் அழுந்திக்கிடந்த தமிழகத்தை உயர்த்துவதற்கு உடனடித் தேவை 'கல்வி
வெளிச்சமே' என்று உணர்ந்து கொண்ட முதல் 'சமூக விஞ்ஞானி' காமராஜர் என்பதை
சரித்திரம் பதிவு செய்துள்ளது.கல்விக்காற்று வீசி அறியாமைப் புழுக்கம்
அகல்வதற்கு கதவை திறந்ததோடு காமராஜ் நிற்கவில்லை. பசியில் வாடும்
ஏழைப்பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால் அவர்கள்
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் என்று சிந்தித்தார்.''அத்தனை பேரும்
படிக்கணும் என்கிறேன், வயிற்றிலே ஈரமில்லாமல் எப்படிப் படிப்பான்? அவனும்
தானே நம் இந்தியாவுக்கு சொந்தக்காரன்? ஏழைக் குழந்தைகளுக்குப்
பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதை தள்ளிப் போட
முடியாது. இதற்கு பணத்திற்கு எங்கே போவது? வழியிருக்கிறது. தேவைப்பாட்டால்
பகல் உணவிற்கென்று வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் ஏழைகளும்
படிக்கணும். அதனால் மற்ற வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டு இதே வேலையாக ஊர்
ஊராக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன்'' என்றார் காமராஜர்.ஏழ்மையில்
பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழைகள் உயர இதயம் விரித்தவர். 4400 தொடங்கப்
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து 16 லட்சம் மாணவர்கள்
பகற்பொழுதில் பசியாற வழியமைத்தார். இந்தியாவில் அதுவரை எங்கும் அரங்கேறாத
ஆட்சியின் அதிசயம் இது.
எட்ட முடியாத சாதனை :
காமராஜர்
கல்வியை மட்டுமா வளர்த்தார்? கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி டெல்டா,
ஆரணியாறு, வைகை நீர்தேக்கம், அமராவதி, காத்தனுார், கிருஷ்ணகிரி,
புள்ளம்பாடி, வீடுர் நீர்தேக்கம், பரம்பிக்குளம், நெய்யாறு, மேட்டூர்
கால்வாய் திட்டம் என்று அவர் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாசன
திட்டங்கள் தான் இன்றும் விவசாயத்தின் உயிர் நாடியாய்
விளங்குகின்றன.நெய்வேலி நிலக்கரித் திட்டம், நீலகிரி பிலிம் தொழிற்சாலை,
ஆவடி டாங்க் தொழிற்சாலை, மேட்டூர் காகித ஆலை, கிண்டி, எண்ணுார்
தொழிற்பேட்டைகள் பல்கிப் பெருகிப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய
முதுகெலும்பாய் முளைத்துவிட்டதும் காமராஜர் தந்த பொற்கால ஆட்சியில்
தான்.குந்தா திட்டம், பெரியாறு நீர்மின்சக்தி திட்டம் என்றும் செயல்படுத்தி
எல்லா கிராமங்களிலும் மின்சாரம் உள்ள ஒரே மாநிலமாக தமிழகத்தை
உருவாக்கியதும் காமராஜர் ஆட்சி தான். எட்டு பேர் கொண்ட அமைச்சரவை
ஏற்படுத்திய சாதனைகளை இன்று வரை எந்த ஆட்சியும் எட்டிப்பிடிக்கவில்லை.
ஏன் போற்றப்பட வேண்டும் :
1963
ல் காந்தி பிறந்த நாளில் காமராஜர் தாமாகவே விரும்பி முதலமைச்சர்
பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அடிமை இந்தியாவில் 9 ஆண்டுகள்
காராக்கிருகத்தின் கம்பிகளை தழுவிச் சிறைப்பறவையாக இருந்த காமராஜர்
சுதந்திர இந்தியாவில் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து இந்த மண்ணில்
கடைசித் தமிழன் உள்ளவரை மறக்க முடியாத சாதனைகளை செய்தார்.காமராஜரை ஏன் நாம்
நினைவில் வைத்துப் போற்ற வேண்டும்? பொற்காலத்தை உருவாக்கிய அவருடைய 9
ஆண்டு ஆட்சி சாதனைகளுக்காகவா? இருண்ட நெஞ்சங்களில் கல்வி வெளிச்சத்தை
இலவசமாக பாய்ச்சியதற்காகவா? ஆறுகள் ஓடும் இடங்கள் அனைத்திலும் அணைகள் கட்டி
விவசாயத்தை வளர்த்ததற்காகவா? தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இரண்டாவது
இடத்தில் நிறுத்தியதற்காகவா? இவையனைத்தும் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்
ஒரு சிறந்த ஆட்சியாளரின் கடமை. இந்த கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிய
காமராஜர் போற்றுதலுக்குரியவர். ஆனாலும்
அவர் போற்றப்படுவதற்கு மிக முக்கியமாக வேறு காரணங்கள் உண்டு.
சரித்திரத்தில் சாதித்த சன்னியாசி :
பொய்மையும்
போலித்தனமும் தன் மீது படிந்துவிடாமல் நேர்மையான அரசியலை மட்டுமே அவர்
அரவணைத்துக் கொண்டார். ஆட்சியையும் அதிகாரத்தையும் தானாக துறந்து எந்த
'பதவி மேனகையும்' தன்னை மயக்கிவிட முடியாது என்று சாதித்துக் காட்டி
சன்னியாசியாக நின்றார்.எளிமையும் உண்மையும் நிறைந்த சிந்தனை, செயல்,
பேச்சுக்கு வடிவம் கொடுத்து வாழ்ந்தார். காந்தியத்தை காதலித்து,
காந்தியத்தை கைப்பிடித்து, காந்தியத்திற்காகவே வாழ்ந்து, காந்தி பிறந்த
நாளிலே கண்மூடி அத்வைதியாக மாறினார்.சமூக நலனுக்காக சகலத்தையும் துறந்த
சன்னியாசி கூட தாய்ப்பாசத்தை தவிர்க்க முடிவதில்லை. எல்லா உறவுகளையும்
வாழ்க்கை சுகங்களையும் நில்லாத கனவென்றும் நீர்மேல் குமிழென்றும் ஒரு
கணத்தில் உதவிவிட்ட ஆதிசங்கரும், பட்டினத்தாரும் கூட உள்ளத்தில் உதறி விட
முடியாமல் தவித்த உறவு தான் தாயின் உறவு. தன்னுடைய பொது வாழ்வில் எந்த
நிலையிலும் களங்கம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த தாயின் உறவையே
தள்ளி வைத்த மகத்தான மனிதர் காமராஜர்.
பொது வாழ்வின் இலக்கணம் :
சொந்த
உறவும் இல்லாமல், சுற்றமும் சூழலும் தந்த உறவும் இல்லாமல், எப்படியோ வந்த
உறவுகளெல்லாம் முதல்வராகப் பொறுப்பேற்பவருக்கு நெருக்கமாகி கோடிகளை
குவிக்கின்ற இந்த மண்ணில் தான் ஈன்ற அன்னைக்கு மாதந்தோறும் 120 ரூபாய்க்கு
மேல் தர மறுத்த தலைவர் காமராஜர்.தான் தங்கியிருந்த வீட்டில் கழிப்பறை
வசதியில்லாததால் வீட்டை ஒட்டி ஓரிடத்தை 3,000 கொடுத்து விலைக்கு வாங்கி,
கழிப்பறை கட்டிக் கொள்ள விரும்புவதாக சிவகாமி
அம்மையார்
தெரிவித்த போது, 'நீ கழிப்பறைக்கு இடம் வாங்க வேண்டும் என்கிறாய்; ஊரில்
உள்ளவர்கள் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்வார்கள். அதெல்லாம் வேண்டாம்
போ' என்று மறுத்தவர் காமராஜர்.அரசுக்கு சொந்தமான ரயில்வே பிளாட்பாரத்தையும்
காந்தி மைதானத்தையும் அடகு வைத்து பணம் பெற்ற முதலமைச்சர்களையும்,
புறம்போக்கு நிலத்தில் தங்க மனம் போன போக்கில் ஆக்கிரமிப்பு நடத்தும்
அருவருப்பான அரசியல்வாதிகளையும் சந்தித்துப் பழகிவிட்ட நம்மால் காமராஜரைப்
போன்ற காந்திய யுகத்தின் தலைவர்களை சந்திக்க முடியாமல் போனால் நஷ்டம்
நமக்குத்தானே தவிர அவர்களுக்கு அன்று. 'சீசரின் மனைவி சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்' என்னும் பொது வாழ்வின் இலக்கணத்தை
காமராஜரைப் போல் கடைபிடிக்கும் அரசியல்வாதிகளைக் காண்பது அரிதினும்
அரிதாகிவிட்டது.அமெரிக்கா அதிபர் கென்னடி மறைந்த போது வழங்கிய இரங்கல்
செய்தியில், 'சாதாரண மனிதர்கள் சாகிறார்கள். ஆனால் தன்னலம் துறந்த
தியாகிகள் மக்களின் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள்' என்று காமராஜர்
குறிப்பிட்டார். ஆம்... உண்மை தான். அவர் வாய் மலர்ந்த வாசகம் அவருக்கே
அழகாகப் பொருந்துகிறது.