குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று டாக்டர் கிரீத்திகா ரவீந்திரன் தெரிவித்தார். உலக
தாய்ப்பால் வார விழா சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர்
கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாக்டர் கிரீத்திகா ரவீந்திரன்
பேசியது:
தற்போது தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால், சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி குழந்தைகள் இறக்க நேரிடுகிறது.
இதனைத் தவிர்க்க,
குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்க
வேண்டும். அதேபோல இரண்டு வயது வரை மற்ற உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பாலும்
கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, மெக்னீசியம்,
அயோடின், வைட்டமின், அவசியமான கொழுப்புக்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள்
உள்ளன. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், மூளை வளர்ச்சிக்கும்
உதவுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்
வருவதற்கான வாய்ப்பு ஆண்டுக்கு 7 சதவீதம் வரை குறைகிறது என்று டாக்டர்
கிரீத்திகா ரவீந்திரன் தெரிவித்தார். விழாவில், தாய்ப்பால் கொடுப்பதை
வலியுறுத்தி கண்காட்சி, மனித சங்கிலி, ஊமை நாடகம், வீதி நாடகம் ஆகியவை
நடைபெற்றன. நிகழ்ச்சியில் நிர்வாகக் குழு உறுப்பினர் கல்பனா முரளிதரன்,
கல்லூரி முதல்வர் நிர்மலா, துணை முதல்வர் மணிமேகலை, நாட்டு நலப்பணித் திட்ட
அலுவலர் பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







