சி.பி.எஸ்.இ.
பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, நாடு
முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இந்தத் தேர்வை சுமார் 7
ஆயிரம் பேர் எழுதினர். சென்னையில் 5 மையங்களிலும், மதுரையில் 4
மையங்களிலும், கோவையில் 4 மையங்களிலும் இத்தேர்வு நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை முதல் தாள் தேர்வும் நடைபெற்றன.
கேந்திர வித்யாலயப்
பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பள்ளிகள்
உள்ளிட்டவற்றில் பணியாற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்
பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. இந்தத் தேர்வை நடத்துகிறது.
தமிழகத்தில் 7
ஆயிரம் பேர்: நாடு முழுவதும் 900-க்கும் அதிகமான மையங்களில் நடைபெற்ற
இந்தத் தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் 3,000-க்கும்
மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். மதுரையில் 2,214 பேர்களில் 1,878 பேர்
தேர்வு எழுதினர். 336 பேர் தேர்வுக்கு வரவில்லை. கோவையில் 1,243 பேர்
தேர்வு எழுதினர். 257 பேர் தேர்வுக்கு வரவில்லை. ஆக மொத்தம் தமிழகத்தில்
சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர் என்று சி.பி.எஸ்.இ.
அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இத்தேர்வை எழுதிய திருச்சியைச் சேர்ந்த எம்.மனோஜ்குமார் கூறியது:
முதல் தாள் தேர்வில்
தமிழ், ஆங்கிலம், உளவியல், கணிதம், சுற்றுப்புறச் சூழல் ஆகிய
பாடங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்தன.
இருப்பினும் உளவியல்
பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிக நேரம் சிந்தித்து
விடையளிப்பதாக இருந்தது. கணிதப் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீண்ட
படிகளில் தீர்வு காணப்பட்டு, அதன்பிறகு விடையளிக்கும் வகையில் இருந்ததால்
நேரம் போதவில்லை என்றார்.
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த பூஜா கூறியது:
இரண்டாம் தாள்
தேர்வில் உளவியல், கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பதில் சிரமமாக
இருந்தது. இவை தவிர அனைத்து பாடங்களிலிருந்தும் கேட்கப்பட்ட கேள்விகள்
எளிமையாகவே இருந்தது என்று கூறினார்.
அனுமதி மறுப்பு: சென்னை முகப்பேர் டி.ஏ.வி. பள்ளி மையத்தில் தேர்வு எழுத சிலர் தாமதாக வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தேர்வு
கூட அதிகாரிகளிடம் கேட்ட போது,"தேர்வு கூட அனுமதிச் சீட்டிலேயே தேர்வுக்கு
அரை மணிநேரம் முன்கூட்டியே வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்
அதனையும் மீறி தாமதாக வந்ததால் அனுமதிக்கவில்லை' என தெரிவித்தனர்.