சமீபத்தில் ஒரு
பெண்மணியுடன் (அரசு பணி புரிபவர் ) பேச நேர்ந்தது .அவருடனான உரையாடல்
மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது. அவர் என்னிடம் கேட்டார் .தற்போது ஆண்கள்
மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களும் ,பெண்கள் பள்ளிகளில் பெண்
ஆசிரியர்களுமே போடப்படுவது நல்லது தானே அப்போ தான் இந்த உலகம் உருப்படும் என்றார்
ஏன்
என்றேன். பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை
பணியமர்த்தினால் அவர்கள் ஏதாவது ஏடாகூடம் செய்து விடுகின்றனர் என்றார் .
நீங்கள் சொல்வது அநியாயம் !எங்கோ யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்பதை கொண்டு எல்லோரையும் குற்றம் சாட்டாதீங்க என்றேன் .
அவரும் விடாமல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றார் .
நான் ,"அது சோற்றுக்கு மட்டும் தான் பதம் !எல்லாவற்றுக்கும் அதை பொது விதி ஆக்காதீர்கள் "என்றேன் !
அவர் சொன்னது கசப்பான உண்மை.
ஆசிரியர் பணியில் இருந்துக்கொண்டு குற்றங்களை களைபவராக இல்லாமல் குற்றங்களை புரிபவராக இருத்தல் கூடாது !
ஆனால் அதற்காக மேனிலைப்பள்ளிகளில் பாலினம் பார்த்து ஆசிரியர்களை அமர்த்துவது .மிகப்பெரிய தவறு .
என்னை பொறுத்த வரை இருபாலரும் குழந்தைகளே !அவர்களில் என்ன பாகுபாடு வேண்டியிருக்கிறது ?
முதலில் இது போன்ற ஆண்கள் ,பெண்கள் பள்ளிக்கூடங்கள் என்று பிரித்து நடத்துவது அடிப்படையிலேயே மிகப்பெரிய தவறு .
சமுதாயம் என்பது ஆண்
,மற்றும் பெண் ஆகிய இரண்டு வர்க்கமும் சேர்ந்தது ,அவர்கள் தவிர்க்கவே
முடியாத அளவிற்கு பின்னி பிணைந்தவர்கள் என்ற நிலை இருக்கும் போது
பள்ளிகளில் இந்த பிரிவு எதற்கு ?
இதில் ஆண்கள்
பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் எனவும் பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள்
எனவும் பணியமர்த்துவது இந்த இரு வேறு இனத்தவரிடையே பெருத்த பிளவையே
உண்டாக்கும் ..
ஒரு குடும்பத்தில்
அதுவரை தனித்தே இருந்த ஆண் குழந்தை தன் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை
நுழைவதையே வெறுக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறான் எனில்
பிறந்தது முதல் பெண் என்பவள் தனித்து பார்க்கப்பட வேண்டிய ஒரு உயிரி
,பிரச்சனைக்குரிய ஒரு உயிரி என்பதாக ஒரு ஆண் குழந்தையின் மனதில் பதிய
வைப்பது எத்தனை பெரிய முட்டாள் தனம் !
மாறாக ஆண் , பெண்
ஆகிய இரண்டு உயிரினங்களும் இந்த பூமியின் தவிர்க்க முடியாத அங்கங்கள் என்ற
ஒரு புரிதல் ஏற்படுவதற்கு இருவரும் அருகருகே வைத்து வளர்க்கப்படுதல்
அவசியம்.
அப்போது தான் ஒருவரை ஒருவர் ஏற்கும் மனப்பக்குவம் வரும் .
அது மட்டுமல்லாமல்
ஆண்களை பற்றிய புரிதலை பெண்களிடையே ஏற்படுதவும் ,பெண்களை பற்றிய புரிதலை
ஆண் பிள்ளைகளிடையே ஏற்படுத்தவும் பள்ளிகளில் இருவேறு பாலினரும் பணி புரிதல்
அவசியம்.
ஏனென்றால் பள்ளி என்பது ஒரு சிறிய சமுதாயம் !
அதற்குள் பழக கற்றுக்கொண்டால் தான் பெரிய சமுதாயமான இந்த உலகத்தில் தடுமாறாமல் வாழ முடியும்.
நன்றி: Vijayalakshmi Raja