இந்திய சமூக ஆர்வலர்
கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம்
ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.குழந்தைகள் நல
உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின்
கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற
பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல்
கமிட்டி தெரிவித்துள்ளது.
டெல்லியில் வசித்து
வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத்
தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி
வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை
பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.
குழந்தைகளுக்கு
கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது ஒரு குற்றம் என்று
கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை,
கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள்
பல்வேரு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வி
என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு. இவரது
கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப்படங்கள், தொலைக்காட்சி
தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம் செலுத்தியுள்ளது.
இவரது இந்த
தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை
வென்றிருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள்
ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன் புது
டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.
மலாலா
இந்திய சமூக ஆர்வலர்
கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி மலாலா
யூசுப்சாய். பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால் பல
இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ல மலாலாவுக்கும்
நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட
பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.
அதாவது, ஓர் இந்து
மற்றும் ஒரு முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் ஆகிய
இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினை அளிக்கும்போது கல்வி மற்றும்
தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு
பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக நோபல் கமிட்டி
குறிப்பிட்டுள்ளது.
இன்று உலகில் 168
மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000ஆம் ஆண்டில் இதைவிட 78
மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கமல்,
முற்றிலும் இல்லாமல் செய்யும் லட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில்
கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.
உயரிய நோபல் பரிசை வெல்லும் இளம் வயது சாதனையாளர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெறுகிறார் 17 வயது யூசுப் மலாலா.
'இந்தியாவுக்கு கவுரவம்' - கைலாஷ் பேட்டி
நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கைலாஷ் சத்யார்த்தி பிடிஐ செய்தி
நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நவீன காலத்தில் நலிவுற்ற நிலையில்
கோடிக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையை அங்கீகரிக்கும் வகையில் நோபல்
அமைப்பு பரிசை அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகள் உரிமைகளுக்கான எங்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது.
குழந்தைகள் நலன் பேண
தொடர்ந்து போராடுவேன். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப்பட்டுள்ளது
ஒவ்வோர் இந்தியருக்கும் கிடைத்த கவுரவம்" என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்
சிறுமிகளின் கல்வி
உரிமை போராளியான மலாலா யூசுப்சாய்க்கு அமைதி நோபல் கிடைத்திருப்பது தங்களது
நாட்டுக்குப் பெருமை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர்
மேலும் கூறும்போது, "மலாலா, பாகிஸ்தான் நாட்டுக்குக் கிடைத்த பெருமை.
அவருக்கு கிடைத்த பெருமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை.
உலகம் முழுவதிலும் உள்ள சிறுவர் - சிறுமியர் மலாலாவின் வழியை பின்பற்ற வேண்டும். உறுதியான போராட்ட குணத்தை பெற வேண்டும்.
பெண்களின் குரல் கூட
உயர்த்தப்படாத சமுதாயத்தில் கல்வி போராட்டத்தை ஏற்படுத்தியவர்தான் மலாலா.
இது மலாலா ஒருவருக்கு கிடைத்த பரிசு அல்ல, பாகிஸ்தானின் பெண்களுக்குக்
கிடைத்த பரிசு. அவர்தான் நமது கண்களின் ஒளியாகவும் இதயத்தின் குரலாகவும்
திகழ்கிறார்" என்றார்.
பாகிஸ்தானின்
பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஆப்கான் எல்லையில் உள்ள ஸ்வாட் மாகாணத்தின்
மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா. பாகிஸ்தான் சிறுமிகளின் கல்வி
உரிமைக்காக போராடிய மலாலாவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலிபான்
பயங்கரவாதிகள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
உயிருக்கு போராடிய
மலாலாவுக்கு லண்டனில் உள்ள ராணி எலிசெபெத் மருத்துவமனையில் சிக்கலான அறுவை
சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிர் பிழைத்தார். அதன் பின்னர்
தாலிபான்களின் கடுமையான மிரட்டல்களையும் தாண்டி அவர் அங்கு சிறுமிகளுக்கு
கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து போராடினார். சிறுமிகள் பள்ளிகளுக்கு
சென்றால், அந்த இடம் தகர்க்கப்படும் என்று தாலிபான்கள் எச்சரித்த பின்னரும்
மலாலாவின் போராட்டம் தொடர்ந்தது.








