திருப்பூர் மாவட்ட
அளவில், உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஏழு
ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் நல்லாசிரியர் விருது
வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக்
கல்வித்துறையின் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகளில் பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி,
உயர்மதிப்பெண் பெற உறுதுணையாக விளங்குதல், மாணவர்களின் திறன்களை
வளர்ப்பதில் ஆர்வம் காட்டுதல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும்
ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கல்வித்துறையின் சார்பில் மாவட்ட
அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது
வழங்கப்படுகிறது.இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில், 9
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து ஏழு ஆசிரியர்களுக்கு
விருது வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர், பல்லடத்தில் புரபசனல் பொறியியல்
கல்லுாரியில் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள்
துணைவேந்தர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
உடுமலை, பாரதியார்
நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவித்தலைமையாசிரியர்
சிவக்குமார், ஆங்கிலாசிரியர் பழனிச்சாமி, பொருளியல் ஆசிரியர் மாரியப்பன்,
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் வசந்தராஜன்,
விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வணிகவியல் ஆசிரியர் சுகந்தி,
ஆங்கிலாசிரியர் சுகந்திலதா மற்றும் நுாறு சதவீத தேர்ச்சி மற்றும்
உயர்மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பட்டியலில், பாரதியார்
நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 19, அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் 15, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 35
ஆசிரியர்களுக்கும், விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களுக்கு
பள்ளி தலைமையாசிரியர்கள், முத்துலட்சுமி, துரைசாமி, விஜயலட்சுமி பாராட்டு
தெரிவித்தனர். விழாவில், மாவட்டக்கல்வி அலுவலர் கரோலின், முதன்மைக் கல்வி
அலுவலரின் நேர்முக உதவியாளர் நுார்மாலிக் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள்
உட்பட பலர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம் :
மடத்துக்குளம் அருகே கணியூர் வெங்கிடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில்
பணியாற்றும் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு, திருப்பூர் மாவட்ட அளவிலான
நல்லாசிரியர் விருதும், இந்தப்பள்ளியில் பல்வேறு பாடங்களில் மாணவர்களை 100
மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர்கள் அன்பழகன், சசிகலா, இசைவாணி,
ஜெயசங்கர், தமிழ்செல்வி, அமுதா ஆகியோருக்கு சிறப்பு விருதும்
வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கணியூர் பள்ளியில்
நடந்தது. பள்ளித்தாளாளர் பாபு, பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை
ஆசிரியர் குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.