'டயட்' என்ற
பெயரில், காலை உணவை இளம்பெண்கள் தவிர்ப்பதால், மகப்பேறு காலத்தில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும் என, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
தவிர்க்க வேண்டியவை...
சென்னை அம்பேத்கர்
அரசு கலை கல்லுாரியின், நாட்டு நலப்பணி திட்டம், மாற்றம் அறக்கட்டளை
இணைந்து, கல்லுாரி மாணவியருக்கும், 'வளர் இளம் பெண்களும் பிரச்னைகளும்'
என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. அந்த நிகழ்ச்சியில், சென்னை
கஸ்துாரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றும், ஸ்ரீகலா பிரசாத்,
சம்பத் குமாரி, வேணி ஆகிய மருத்துவர்கள், மாணவியரின் சந்தேகங்களுக்கு
விளக்கமளித்தனர்.
அவர்கள் தெரிவித்த கருத்துகள் தொகுப்பு:
வளர் இளம்
பருவத்தில் உள்ள மாணவியரில் பலர், பர்கர், பிட்சா, நுாடுல்ஸ் உள்ளிட்ட கூடா
உணவுகளை (ஜங்க் புட்) அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர்.
இதனால், உடல்
பருமன், சீரற்ற மாதவிலக்கு, நீர்க்கட்டிகள் உள்ளிட்ட உபாதைகள் உண்டாகின்றன.
கூடா உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல், பல மாணவியர், 'டயட்' என்ற
பெயரில், காலை உணவை தவிர்க்கின்றனர். அதனால், உடல் மெலிவு, இரும்பு சத்து
பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால், மகப்பேறு போன்ற
பாக்கியங்களில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெண்கள், முதலில், தன் சுத்தம்
பேண வேண்டும். குறிப்பாக, மாதவிலக்கு காலத்தில், ஆறு மணிக்கு ஒரு முறை
நாப்கின்களை மாற்றி, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்,
சிறுநீர் குழாய் தொற்று நோய்கள், கருப்பை சார்ந்த நோய்கள் ஏற்பட
வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் கவலை
அந்த நிகழ்ச்சியில்,
500க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். அவர்களிடம், கர்ப்பப்பை
வாய் புற்று நோய் பற்றிய கேள்விகளையும், அவர்களின் தாய்கள், கர்ப்பப்பை
புற்றுநோய் சோதனை செய்திருக்கின்றனரா என, மருத்துவர்கள் கேட்டனர். ஆனால்,
எந்த மாணவியும் சாதகமான பதில் சொல்லாததால், மருத்துவர்கள் கவலையடைந்தனர்.
புற்றுநோய் கண்டறியும் சோதனை அவசியம்
பெண்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என, மருத்து வர்கள் கூறிய கருத்துகள்:
பெண்களின்
இனப்பெருக்க மண்டலத்தை பற்றியும், கருவுருதல் பற்றிய புரிதலும்
அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், பாலியல் நோய்கள்,
எய்ட்ஸ் குறித்த பயம்
இல்லாமல் இருக்கும். சிறுநீரை அடக்குதல் கூடாது. அதனால், சிறுநீர் பை,
கட்டுப்பாட்டை இழக்கும். பெண்கள், மாத விலக்கு சுழற்சியின் மாற்றங்களை
கவனித்து, தேவைஇல்லாத காலங்களில் வெளிப்படும் வெள்ளை திரவம் பற்றி
மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
அருகில் உள்ள பெண்கள், எடுத்துக்கொள்ளும், கருத்தடை சாதனங்களை
பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், 'மேமோகிராம்' என்னும்,
மார்பக சோதனையையும், 'பாப்ஸ்மியர்' என்னும், கர்ப்பப்பை வாய் புற்று நோய்
கண்டறியும் சோதனை களையும் செய்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மருத்து வர்கள் தெரிவித்தனர்.