எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 206 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 449 மாணவர்கள், 9 ஆயிரத்து 843 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1,200 பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 492 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். மாவட்டம் முழுவதும் 51 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரவசதி போன்ற அடிப்படை தேவைகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வுகளின்போது காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு பறக்கும் படை வீதம் 51 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் தலைமையில் 4 சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








