கிருஷ்ணகிரி, தருமபுரி
மாவட்டங்களில் பிளஸ் 2 வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின்
தேர்வு மையங்களில் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி தெரிவித்தார்.
பிளஸ் 2 கணிதத் தேர்வின்போது, கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூரில் உள்ள தனியார் பள்ளித் தேர்வு மையத்தில் பணியில் ஈடுபட்ட தனியார்
பள்ளி ஆசிரியர்கள் செல்லிடப்பேசியில் வினாத்தாளைப் பதிவு செய்து
முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
தேர்வு மைய விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டதாக
மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் கைது
செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிளைச் சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் மு.ராமசாமி கூறியது: பிளஸ் 2 தேர்வை முறையாக நடத்தும் வகையில்,
வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
செயல்படும் அந்தத் தனியார் பள்ளிகளின் 3 தேர்வு மையங்களில் அமர்த்தப்பட்ட
கண்காணிப்பாளர்களுக்கு மாற்றாக புதிய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
மேலும், இந்தத் தேர்வு மையங்களில் ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 2
கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். அந்தத் தனியார் பள்ளி மாணவர்களுக்கு
என, மறு தேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோர்களும்
வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்
என்றார்.








