பிளஸ் 2 முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு
ஆலோசனை வழங்க தினகரன் நாளிதழ் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் மெகா கல்வி
கண்காட்சி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றே ஆயிரக்கணக்கான மாணவர்கள்
வந்து கண்காட்சியை பார்வையிட்டனர். தமிழகத்தில் பள்ளி கல்வி என்பது
மாணவர்கள் மதிப்பெண் எடுப்பது என்கிற அளவிலேயே இருக்கிறது. பிளஸ் 2
படித்து முடித்த பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களிடையே
மட்டும் இல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து
வருகிறது. கல்லூரி கல்வி என்பது ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்
விஷயமாக உள்ளது. மேற்படிப்பு என்பது நாளுக்கு நாள் பல்வேறு புதிய
படிப்புகள், புதிய துறைகள் மற்றும் நவீனத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே
வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு
வருகிறது.
எனவே, மாணவர்கள் எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும்
என்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம். எனவே, அவர்களுக்கு
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் எப்படி செயல்படுகின்றன. அவர்கள் வழங்கும்
கல்வி என்ன. எந்த பாட திட்டத்தில் சேர்ந்தால் எதிர்காலம் சிறப்பாக
இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
எது உடனடியாக வேலை வாய்ப்பு தரும் படிப்பு என்பதை தேர்வு செய்வதில் சிரமம்
உள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி
அனைவருமே மாறிவரும் காலத்துக்கு ஏற்ப பாடங் களை தேர்வு செய்வதில் சிரமம்
உள்ளது. குறிப்பாக மாணவர்களை விட அவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளையை எந்த
பாடத்தில், எந்த கல்லூரியில் தங்கள் சக்திக்கு ஏற்ப சேர்க்க முடியும்
என்பது மிகவும் சவாலான விஷயம்.அந்த சவாலை சந்தித்து தங்கள் வீட்டு செல்லங்களுக்கு எந்த பாடப்பிரிவில் சேர்க்கலாம் என்கிற கவலை தீர்க்கும் அருமருந்தாக, தினகரன் நாளிதழ் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக கல்விக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படும் கண்காட்சியாக இருந்து வருகிறது. மூன்று நாள் கண்காட்சி துவக்கம்: தினகரன் நாளிதழும், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமும் இணைந்து மாபெரும் கல்விக் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்துள்ளன. கண்காட்சி நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர். தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ஸ்பான்சர்ஸ்: கண்காட்சியை தினகரன் நாளிதழ், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தனலட்சுமி பொறியியல் கல்லூரி, எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி, ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி ஆகியவையும் ஸ்பான்சர் செய்கின்றன. மேலும் ரேடியோ பார்ட்னர் சூரியன் எப்.எம் மற்றும் தமிழ்முரசு நாளிதழ், குங்குமம். 100 பிரமாண்ட ஸ்டால்கள்: கண்காட்சியில் 100 ஸ்டால்கள் வரை இடம்பெற்றுள்ளன. பொறியியல், மருத்துவம், கட்டிடவியல், சட்டம், கேட்டரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களை வழங்கும் முன்னணி கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. 10 வெளிநாட்டு நிறுவனங்கள்: தினகரன் கல்வி கண்காட்சியில் 10 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் ஸ்டால்களை அமைத்துள்ளன. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு அயல்நாட்டில் வழங்கப்படும் கல்வி குறித்து வழிகாட்டுகின்றன.
குவிந்த மாணவ செல்வங்கள்: தினகரன் கல்வி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு நேற்று பிரமாண்ட கண்காட்சி துவங்கியது. இதில் கல்வி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தங்கள் பெற்றோரு டன் பார்வையிட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் காலையில் இருந்தே குவிந்தனர். அதேபோல தங்கள் சக வகுப்பு தோழர்கள் மற்றும் தோழிகளுடன் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். கிரிக்கெட் உலகப் கோப்பை இறுதி போட்டி, விடுமுறை நாள் மற்றும் வாட்டி எடுக்கும் கோடை வெப்பத்தை பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் பஸ், கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்து குவிந்தனர். அவர்கள் ஆர்வத்து டன் கண்காட்சியை பார் வையிட்டதுடன், தங்களு க்கு ஏற்பட்ட சந்தேகங் களை கல்வி நிறுவன ஸ்டால்களில் கேட்டு தெளிவு பெற்றனர். பலர் கல்லூரிகளின் விளக்க குறிப்பு கையேட்டை பெற்றோர் வாங்கிச் சென்றனர்.
இலவச பஸ் வசதி
கல்வி கண்காட்சிக்கு வந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில், தாம்பரம், குரோம்பேட்டை, கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லியில் இருந்து இலவசமாக பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சி நாளை முடிவடைகிறது. இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம். தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
கல்வி கடன் முதல்.. கடல்சார் படிப்பு வரை
கண்காட்சியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த வகையில் கல்வி கடன் கிடைக்கும், விதவிதமான படிப்புகள் எந்த கல்லூரியில் உள்ளன, பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் விவரங்கள், வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் புதிய துறைகள், ஸ்காலர்ஷிப் விவரங்கள், கடல்சார் பொறியியல் மற்றும் விமான கலை படிப்புகள், இன்ஜினியரிங்கில் எந்த துறை பெஸ்ட், உடனடி வேலைக்கு என்ன படிக்கலாம், மருத்துவ படிப்புகள் குறித்த அறிவுரைகள், வெளிநாட்டு கல்விக்கு வாய்ப்பு இருக்கிறதா, பிசினஸ் கல்வி, கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் மேற்படிப்பு வழிகாட்டும் வகையில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.