மாணவர்கள் பிட் அடித்ததால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 ஆசிரியர்கள்
தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 40
ஆசிரியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு கடந்த 5ம் தேதி
தொடங்கி நடந்து வருகிறது. ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு அறையில்
இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாளை லீக் அவுட்
செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தும் முறைகளில் கடுமையான விதிமுறைகள்
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 18ம் தேதி கணக்குபதிவியல், வேதியியல்
தேர்வின்போது, வேலூர் மாவட்டத்தில் ஒரு சில தேர்வு மையங்களில் மாணவர்கள்
மறைத்து வைத்திருந்த Ôபிட்Õ சிக்கியது. இதுகுறித்து தேர்வு மைய பள்ளி
கண்காணிப்பாளர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமாருக்கு தகவல்
கொடுத்தனர். இதையடுத்து அவர், கவன குறைவாக செயல்பட்டதாக கூறி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 ஆசிரியர்களை தேர்வு பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் தேர்வு அறையில் சில மாணவர்களிடம் இருந்து ‘பிட்‘ பிடிபட்டது. அந்த மாவட்டத்தை சேர்ந்த 40 முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை மெமோ கொடுத்துள்ளது. உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்கும் வரை ஆசிரியர்கள் ஏன் சரியாக பணி செய்யவில்லை என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் பிட் அடித்த விவகாரத்தில் வேலூர் ஆசிரியர்கள் 30 பேர் விடுவிக்கப்பட்டதும், திருவண்ணாமலையில் 40 ஆசிரியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்ட சம்பவமும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.