வாட்ஸ் அப்’பில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக கைதான 4
ஆசிரியர்களும், சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை வருகிற 9–ந் தேதி வரை
நீதிமன்ற காவலில் வைக்க ஓசூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘வாட்ஸ் அப்’பில் வெளியான வினாத்தாள்
பிளஸ்–2
கணிதத் தேர்வு கடந்த 18–ந் தேதி நடந்தது. அன்று கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூரில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த
ஆசிரியர் மகேந்திரன் கணித வினாத்தாளை செல்போனில் படம் எடுத்து, அதை ‘வாட்ஸ்
அப்’ மூலமாக ஆசிரியர் உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து மற்ற 2
ஆசிரியர்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் மகேந்திரன்,
கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள்
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இது
தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் விசாரணை நடத்தி, ஓசூர்
கல்வி மாவட்ட அலுவலர் வேதக்கண் தன்ராஜ் உள்பட கல்வித்துறையைச் சேர்ந்த 5
பேரை பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். கைதான
ஆசிரியர்களிடம் இருந்து செல்போன்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்
பறிமுதல் செய்தனர்.
மேலும் 4 ஆசிரியர்கள் கைது
போலீசார்
பறிமுதல் செய்த செல்போன்களில் ‘வாட்ஸ் அப்’பில் இருந்த தகவல்கள்
அழிக்கப்பட்டு இருந்ததால், அதை ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலமாக மீண்டும்
எடுக்க, சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் திடீர்
திருப்பமாக நேற்று முன்தினம் இரவு, அதே பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும்
வேலூர் மாவட்டம் நாட்ரம்பள்ளியை அடுத்த வெங்கட்டகவுண்டனூரைச் சேர்ந்த
சஞ்சீவ் (25), வாணியம்பாடியைச் சேர்ந்த விமல்ராஜ் (27), ஓசூர்
மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (26), வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த
கவிதா (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இரவு
விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது.
ஏற்கனவே
கைதான 4 ஆசிரியர்கள், மற்றும் தற்போது கைதாகி உள்ள 4 ஆசிரியர்கள் என்று
மொத்தம் 8 ஆசிரியர்கள் மீதும், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை
தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
உள்ளது. இவர்கள் அனைவரும் ஓசூரில் ஒரே தனியார் பள்ளியில் பணிபுரியும்
ஆசிரியர்கள் ஆவார்கள். செல்போனில் உள்ள ‘வாட்ஸ் அப்’ மூலம் வினாத்தாள்
இவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
9–ந் தேதி வரை காவல்
இவர்கள்
4 பேரிடமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணகிரியில் உள்ள
அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து கைதான ஆசிரியர்கள்
சஞ்சீவ், விமல்ராஜ், மைக்கேல்ராஜ், கவிதா ஆகிய 4 பேரும் நேற்று பிற்பகல்
ஓசூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்–2–ல், மாஜிஸ்திரேட்டு
சுரேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை வருகிற
9–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார்
உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள்
சஞ்சீவ், விமல்ராஜ், மைக்கேல்ராஜ் ஆகிய 3 பேரும் சேலம் மத்திய சிறையிலும்,
ஆசிரியை கவிதா கிருஷ்ணகிரியில் பெண்களுக்கான கிளை சிறையிலும்
அடைக்கப்பட்டனர்.