திருவாரூரில் கட்டப்பட்டு வரும்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் மாளிகை
கட்டட கட்டுமானப் பணியின்போது முகப்பு வளைவு இடிந்து விழுந்ததில் 5 பேர்
உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர்- மயிலாடுதுறை சாலை கங்களாஞ்சேரி அருகே
நீலக்குடி, நாகக்குடி ஆகிய இரு கிராமங்களில் 560 ஏக்கர் பரப்பளவில்
ரூ.1,000 கோடியில் கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில், பல்கலைக்கழக வளாக கட்டுமானப் பணிகளை மத்திய
பொதுப் பணித் துறையினர் (சி.பி.டபிள்யூ.டி.) செய்து வருகின்றனர்.
ஆந்திரத்தைச் சேர்ந்த டிஇசி என்ற தனியார் கட்டுமான நிறுவனம்
விருந்தினர்கள், ஆய்வாளர்கள் மாளிகையை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.
பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், நாகக்குடி
குடியிருப்பு வளாகத்தில் விருந்தினர் மாளிகை கட்டும் பணி தற்போது நடைபெற்று
வருகிறது. முதல் மாடிக்கு கான்கிரீட் தளம் அமைக்க இரும்புக் கம்பிகள்
உதவியுடன் இரும்புப் பலகை (சென்ட்ரிங்) அமைக்கும் பணி கடந்த இரு
நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சென்ட்ரிங் அமைக்கும்
பணியில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, ராஜகண்ணு, அய்யனார்
ஆகியோரும் ஒடிஸா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 21 தொழிலாளர்களும்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கட்டடத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த
கான்கிரீட் உத்தரம் (முகப்பு வளைவு) இடிந்து விழுந்தது. பணியில் இருந்த
தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்த பல்கலைக்கழக
நிர்வாகத்தினர் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல்
கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆகியோர் மீட்புப் பணிகளை
முடுக்கிவிட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய மயிலாடுதுறை சின்னசாமி (29),
பட்டவர்த்தி குமார் (35), ஒடிஸாவைச் சேர்ந்த சமீர்குமார் செட்டி (26),
கிட்டு (26), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்சுபாத் (18) ஆகியோர்
நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 16 பேர் திருவாரூர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தை
திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ராமசுப்பிரமணியன், தஞ்சை சரக
டிஐஜி சஞ்சய்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
பொறியாளர்கள் உள்பட 4 பேர் கைது
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கட்டுமானம்
சரிந்து 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக களப் பொறியாளர்கள் ஆனந்த், அந்தோணி
அமல் பிரபு, ஒப்பந்ததாரர் சதீஷ்குமார், மேற்பார்வையாளர் அய்யனார் ஆகிய 4
பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப்
பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.