மழலையர், தொடக்கப் பள்ளிகளில்
கற்பிக்கும் கல்வித் தரத்தை மேம்படுத்தி, உறுதி செய்ய வேண்டும் என "தினமணி'
ஆசிரியர் கே.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை வடக்கு மாசிவீதியில் உள்ள மணியம்மை மழலையர் -
தொடக்கப் பள்ளியின் 29ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை தல்லாகுளம்
லட்சுமிசுந்தரம் அரங்கில் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு பரிசுகள்
வழங்கி அவர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் உயர் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி
விட்டோம். பல பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நிர்வாகப்
பயிற்சிக் கல்லூரிகள் வந்து விட்டன. ஆனால், மழலையர் கல்வி, தொடக்கக்
கல்வியில் நாம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டோம். இப்போது 8 ஆம் வகுப்பு
வரை தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இல்லை என்ற காரணத்தால், 10 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு சரியாகத் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்கள் தெரியவில்லை. இது
மிகமிக வேதனைப்படக் கூடிய விஷயம்.
அடிப்படைக் கல்வி என்ற அஸ்திவாரம் இல்லாமல் உயர் கல்வியான மிகப்பெரிய கட்டடங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.
பொறியாளர்கள், மருத்துவர்களை உருவாக்கிவிட்டோம் எனப்
பெருமைபட்டுக் கொள்ளலாமே தவிர உலக அரங்கில் நாம் அவமானப்படப் போகிறோம்
என்பது தான் உண்மை. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் இதே
நிலைதான். ஆகவே, நாம் உயர் கல்வியில் காட்டுகிற முனைப்பையும்
அக்கறையையும், தொடக்கக் கல்வியிலும் காட்ட வேண்டும்.
அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. மழலையர்
பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அதனடிப்படையில் தரமான அடிப்படைக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்.
பெற்றோர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீங்கள் உங்கள் குழந்தைகளை நல்ல, தலைசிறந்த ஆசிரியர்களிடம் படிக்கவைக்க
நினைக்கிறீர்கள். ஆனால், உங்களில் எத்தனை பேர் குழந்தைகளை நல்ல
ஆசிரியர்களாக்க நினைக்கிறீர்கள் என எண்ணிப் பார்க்க வேண்டும். உலக அளவில்
இன்றைய தேவை சிறந்த ஆசிரியர்கள்தான்.
உலகம் முழுவதுமே ஆசிரியர்களின் தேவை அதிகமிருக்கிறது.
சிறந்த ஆசிரியர்களாக உங்கள் குழந்தைகளை நீங்கள் உருவாக்கினால் அந்த
குழந்தைகளுக்கும் நல்லது, அடுத்த சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் உருவாகும்.
ஆகவே, சிறந்த ஆசிரியர்களை உருவாக்குங்கள் என்ற கோரிக்கையை பெற்றோர்களுக்கு
வைக்கின்றேன்.
மழலையர், தொடக்கப் பள்ளிகளில் தரமான அடிப்படைக்
கல்வியையும் நல்ல அஸ்திவாரத்தையும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என
அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் "தினமணி' ஆசிரியர்
கே.வைத்தியநாதன்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் பி.நம்பெருமாள்சாமி வாழ்த்திப் பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வியுடன் கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆகியவற்றையும் கற்பிப்பது அவசியம்.
குழந்தைகளை வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது. அவர்கள் நல்ல கருத்துகளையும், பண்புகளையும் குழந்தைகளிடம் கூற வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர
வேண்டும். அவர்களை நல்ல வழிகாட்டுதலோடு சமூகத்தில் சிறந்தவர்களாக்க
வேண்டும். கூட்டுமுயற்சி வெற்றிதரும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை
வகித்தார். இயக்குநர் அமுது ரசினி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்
து.சேதுராணி வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
விழாவில் நிஜநாடக இயக்கத் தலைவர் பேராசிரியர் ராமசாமி,
அமுதன், திருநகர் வாசகர் வட்டத் தலைவர் மு.செல்லா, மதுரைக் கல்லூரி வாரிய
உறுப்பினர் இல.அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.