பட்டம் பெற்ற பிறகு மாணவர்கள்
தங்களது துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என சென்னை மீனாட்சி
பல்கலைக்கழக இணைவேந்தர் ஏ.ஞானம் கூறினார்.
செய்யாறை அடுத்த வடமாவந்தலில் உள்ள அருள்மிகு மீனாட்சி
அம்மன் பொறியியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு பட்டமளிப்பு வெள்ளி விழா
கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மீனாட்சி
அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் ஜி.ராமதாஸ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை மீனாட்சி பல்கலைக்கழக இணைவேந்தர் ஏ.ஞானம் பங்கேற்றுப் பேசியதாவது:
பட்டம் பெற்ற பிறகு மாணவர்கள் தங்களது துறையில்
ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்திய பல்கலைக்கழகங்களில்
மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன், பல்முனைப் பட்டங்கள் பெறக் கூடிய வகையில்
பாடத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் 173 இளநிலைப் பொறியியல் மாணவர்களுக்கும்,
80 முதுநிலைப் பொறியியல் மேலாண்மை, கணினிப் பயன்பாட்டியல் மாணவர்களுக்கும்
பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற
மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.