9 அம்ச கோரிக்கைகள்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழக அரசு உடனடியாக குரூப்-7 ஏ மற்றும் பி பிரிவு பணி இடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 9-ந்தேதியில் இருந்து பார்வையற்ற பட்டதாரிகள், மாணவ-மாணவிகள் சாலைமறியல் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
8-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நேற்று தொடர்ந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரகம் வளாகத்தில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையற்ற பட்டதாரிகள் செல்வமணி, சுப்பிரமணி, அரவிந்தன், சக்திவேல், கருப்புசாமி, வில்வநாதன் ஆகிய 6 பேர் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வரும் வேளையில், நேற்று பார்வையற்ற பட்டதாரி பெண்கள் சூரியகலா, கவுதமி, அனிதா, விஜயா, சங்கீதா, லட்சுமி, தேன்மொழி ஆகிய 7 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
ஆதரவு தர வேண்டுகோள்
முதல்-அமைச்சரை சந்திக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அந்த மாணவிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அரசியல் கட்சியினரும், மற்ற அமைப்புகளும் வெறும் அறிக்கைகள் மட்டும் தராமல் தங்களுக்காக களத்தில் இறங்கி போராட முன் வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்றும்(செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடரும் என்றும் மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர்.
போராட்டம் வாபஸ்?
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி எங்களை தலைமை செயலகத்துக்கு அழைத்து பேசினார். அப்போது, ‘உங்களுடைய கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும், நாளைக்குள் (இன்று) நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.








