கோடை வெயில்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தர்பூசணி, இளநீர், பழச்சாறு உள்பட உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை பொதுமக்கள் நாட தொடங்கி உள்ளனர்.
விலங்குகளை பொறுத்தவரையில் நாய்கள் அன்றாடம் 2 லிட்டர் தண்ணீரும், பூனைகள் 30 மில்லி லிட்டர் தண்ணீரும் (பூனைகள் பாலை அதிகம் விரும்பும், தண்ணீரை விரும்பாது), பறவைகளை பொருத்தவரையில் காட்டுப்பறவைகள் 400 மில்லி லிட்டர் முதல் 1 லிட்டர் தண்ணீரும், வீட்டு பறவைகள் 300 முதல் 500 மில்லி லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று கால்நடைகள் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
5 லிட்டர் தண்ணீர் குவளை
கோடைகாலத்தில் மனிதர்களை போன்று விலங்குகளும், பறவைகளும் வெயிலால் அதிகம் களைப்படைகின்றன. அவைகள் தண்ணீருக்காக அலைய வேண்டி உள்ளது. நவீன உலகின் வளர்ச்சி, கணினி மயமான மனித வாழ்க்கையால் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் குறைந்து, மாறாக அவைகள் மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமையே இன்று சமூகத்தில் அதிகம் அரங்கேறி வருகின்றன.
இத்தகைய சூழலில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கோடைகாலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னையை சேர்ந்த ‘பீப்புள் பார் கேட்டில் இன் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், ‘ வாட்டர் பவுல் சேலஜ்’ என்ற பெயரில் தண்ணீர் குவளைகள்(5 லிட்டர் கொள்ளளவு உடையது) வழங்கும் பணியை நேற்று தொடங்கியது.
நடிகர் சிபிராஜ்
சென்னை சாந்தோமில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் தண்ணீர் குவளைகள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜெயந்தி, திரைப்பட நடிகர் சிபிராஜ், நடிகை அலிசா, விலங்குகள் நல ஆர்வலர் பிரேமா வீரராகவன், பழம்பெரும் டைரக்டர் வியட்நாம் வீடு சுந்தரம், பின்னணி பாடகி சவுந்தர்யா உள்பட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அனைவரும், ‘பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
பின்னர் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் தண்ணீர் குவளையுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்துகொண்ட இளம்பெண்கள் தண்ணீர் குவளைகள் மூலம் நாய்கள், பூனைகளுடைய தாகத்தை தணித்தனர்.
இலவசம்
நிகழ்ச்சி குறித்து ‘பீப்புள் பார் கேட்டில் இன் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் ஜி.அருண் பிரசன்னா கூறியதாவது:-
கோடைவெயிலில் இருந்து விலங்குகளையும், பறவைகளையும் காக்கும் நடவடிக்கையாக தண்ணீர் குவளைகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளோம். வழங்கப்படும் தண்ணீர் குவளைகளை வீட்டின் மாடி, பால்கனி, தோட்டம், தெருக்கள் ஓரம், அலுவலகம் ஆகிய இடங்களில் தண்ணீரை நிரப்பி வைத்தால் பறவைகளும், விலங்குகளும் தங்களுடைய தண்ணீர் தாகத்தை தீர்த்து கொள்ளும்.
3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் குவளையை தூய்மைப்படுத்தி தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும் என்பது மிக அவசியம். தண்ணீர் குவளை இலவசமாகவே வழங்கப்படும். தேவைப்படுவோர் சென்னை தியாகராயர்நகர் ராகவய்யா சாலையில் உள்ள எங்கள் அலுவலகத்தை அணுகலாம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட கடந்த ஆண்டு 1,000 தண்ணீர் குவளைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 10 ஆயிரம் தண்ணீர் குவளைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.








