சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்து மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல்
வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச் சிறுப்பான்மையினர் பேரவை சார்பில்
விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின்
கலந்தாய்வுக் கூட்டம் தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
அரசுப் பணிக்குச் செல்லும் இன்றைய தலைமுறையினருக்கு
இடஒதுக்கீடு போராட்ட வரலாறு தெரியவில்லை. சமூக நீதிக் கட்சி, திராவிட
இயக்கங்களின் பங்களிப்பு காரணமாக தமிழகத்தில் சமூக நீதி நிலை
நாட்டப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி
இடங்கள் வேண்டுமென்றே நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக ஊடகம் போன்ற
முக்கியத் துறைகளில்கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள்
கணிசமான அளவில் பணியாற்றக்கூடிய சூழ்நிலை நிலவவில்லை.
இந்நிலை மாற வேண்டும். எனவே, சுதந்திரப் போராட்டம்
குறித்து பள்ளிகளில் போதிப்பதைப் போல சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவை
குறித்தும் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு
போராட்டத்தை அரசியல் ரீதியாகவும் தீவிரப்படுத்த வேண்டும்' என்றார் அவர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட பேரவையின்
தலைவர் வே.ஆணைமுத்து வரவேற்றுப் பேசியதாவது: "சமூக நீதி போராட்டத்தை அறிய
பெரியாரையும், அம்பேத்கரையும் படித்து கற்றுணர்வது அவசியம்.
கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் முழுமையாகக்
கிடைக்கவில்லை. இதற்காக சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அவற்றை முழுமையாக
நடைமுறைப்படுத்தும் பணியை அரசு பணியாளர்கள்தான் மேற்கொள்கின்றனர்.
இப்பணியிடங்களில் பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்கள் அதிகளவு
வர வேண்டும்' என்றார்.
பிகார் மாநில எம்.பி அனுப்பிரியா படேல், உத்தர பிரதேச
மாநில எம்.பி. யஷ்வந்த் சிங், தமிழக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜே.எம்.
ஹாரூண் ஆகியோரும் பேசினர். அகில இந்திய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலச்
சங்கத் தலைவர் பேராசிரியர் பி.சி.பதஞ்சலி, இந்திய சமூக மையத்தின் நிர்வாக
இயக்குநர் ஜோசப் சேவியர், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர்
இரா. முகுந்தன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.








