இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு கூடுதல்
நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில
இந்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
புதுவையில் அக்கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு,
கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 4ஆவது நாளாக சனிக்கிழமை
நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கல்வித் தரத்தை மேம்படுத்த கூடுதல் நிதி: மோடி
தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 16.5 சதவீதம் நிதியை
குறைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. கல்விக்கான உரிமைச் சட்டம் இருந்தும்,
தரமான கல்வி வழங்க உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. பாடத் திட்டங்களில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளைப் புகுத்தும் அபாயம் வளர்ந்து வருகிறது.
உலகத் தரத்திற்கு கல்வியை மேம்படுத்த மத்திய அரசு
கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கல்வியைப் பாதுகாப்போம், தேசத்தை
பாதுகாப்போம் என்பதே நமது கோஷமாக இருக்க வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்: வெளிநாடு வாழ்
இந்தியர்களின் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அரபு நாடுகள்
உள்ளிட்ட பிற நாடுகளில் சிறையில் உள்ள இந்தியர்கள் எத்தனை பேர் மற்றும்
அவர்களின் நிலை குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, வெளிப்படையான நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் பயிற்சி நிறுவனங்களான பிரசார் பாரதி,
திரைப்பட தணிக்கை வாரியம், ஐ.சி.எச்.ஆர், என்.சி.இ.ஆர்.டி, என்.பி.டி போன்ற
நிறுவனங்களில் மத ரீதியான உள்ளீடுகளை தடுக்க வேண்டும்.
நிதி நிறுவனங்கள்: நாட்டிலுள்ள சீட்டு, நிதி
நிறுவனங்களை முறைப்படுத்துவதுடன், கடும் சட்டங்கள் இயற்றி அவற்றை
கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.